பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் (SIR) பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் மாநிலம் முழுவதும் 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
இது அம்மாநிலத்தில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் அரசியல் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் இருந்து பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்துள்ளவர்கள் அவர்கள் தற்போது வசிக்கும் மாநிலத்தில் வாக்காளராக சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் தொகுதிக்கு 3,000 பேர் வீதம் சுமார் 6.5 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படக் கூடும் என்றும் பரபரப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் பீகாரில் நேற்று வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 7 கோடியே 24 லட்சத்து 5 ஆயிரத்து 756 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, முதல் வரைவு வாக்காளர் பட்டியலில் 7 கோடியே 89 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட பெயர்களில், 22 லட்சத்து 34 ஆயிரம் வாக்காளர்கள் இறந்துவிட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் நிரந்தரமாக தங்கள் வசிப்பிடத்தை மாற்றியதாகவும், 7 லட்சத்து 1 ஆயிரம் பேரின் பெயர்கள் இரண்டு இடங்களில் பதிவு செய்யப்பட்டதாகவும் ஆணையம் கூறியுள்ளது.

பீகார் மாநில அரசியலை தீர்மானிக்கக்கூடிய சீமாஞ்சல், அராரியா, கிஷன்கஞ்ச், பூர்னியா மற்றும் கதிஹார் ஆகிய நான்கு மாவட்டங்களில், மொத்தம் 7.6 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில் முஸ்லிம் மக்கள் தொகை சதவீதம் 38% முதல் 68% வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டுள்ள இணைப்பில் தனது பெயர் இடம்பெறவில்லை என்றும் இதனால் தான் தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை உள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து ஒரே கதவெண்ணில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு மதத்தினர் உள்ளதாக வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

தவிர, ஒரே வீட்டில் வசிப்பதாக கூறப்பட்டுள்ள வாக்காளர்களின் உறவினர்கள் யாரும் அதே வீட்டில் இல்லாததும் அந்த வீட்டில் பல வாக்காளர்கள் இருப்பின் அவர்கள் அனைவரும் தனித்தனி வாக்காளர்களாக காண்பிக்கப்பட்டுள்ளதுடன் 50 வயதைக் கடந்த பல வாக்காளர்களுக்கு அவர்களின் உறவினர்கள் யாரும் அதே முகவரில் இல்லாதது போல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இதுபோன்ற பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தெரியவந்துள்ளதை அடுத்து பீகார் வாக்காளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.