அலகாபாத்
அலகாபாத் பல்கலைக்கழக துணைவேந்தர் ரத்தன் லால் ஹங்க்லூ ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக ராஜினாமா செய்துள்ளார்.
அலகாபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் ரத்தன் லால் ஹங்க்லூ மீது நிர்வாகம் மற்றும் நிதி இனங்களில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் அவர் அங்குள்ள பெண் ஊழியர்களுக்கும் மாணவிகளுக்கும் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் புகார்கள் உள்ளன. இதையொட்டி அவருக்குத் தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
இந்நிலையில் நேற்று ரத்தன்லால் ஹங்க்லூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இது குறித்து பல்கலைக்கழக மூத்த அதிகாரி ஒருவர் ஹங்க்லூ மீது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் புகார்கள் உள்ளதாகவும் இந்த புகார்கள் மீது விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ஹங்க்லூ ராஜினாமா செய்ததை உறுதிப்படுத்தியதுடன் அவர் தனது சொந்த அலுவல் காரணமாக ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளதாகக் கூறினார். இது குறித்து ஹங்க்லூ, “நான் ராஜினாமா செய்தது உண்மைதான். என் மீது ஆதாரம் இல்லாமல் விசாரணைகள் நடந்தன. பல புகார்கள் உண்மைக்கும் சிறிதும் தொடர்பில்லாமல் இருந்ததால் நான் எரிச்சல் அடைந்து ராஜினாமா செய்துள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.