பெண்களை அடிமைப்படுத்தும் பல சட்டத்திட்டங்களை திருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் சவூதி இளவரசர் முகமது பின் சல்மான். இந்த நடவடிக்கைகளுக்கு உலகம் முழுதும் இருந்து ஆதரவு பெருகி வரும் நிலையில் இந்நடவடிக்கைகளை நிறுத்துமாறு அல்கொய்தா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
சவுத அரேபிய நாட்டில் பெண்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெண்கள் வாகனங்களை ஓட்ட அனுமதி, பெண்களுக்கேன பிரத்யேக மால்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு அதிரடி திட்டங்கள் மூலம் பெண்களுக்கு உரிமைகளை அளித்து வருகிறார் அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான். அதிரடியான திட்டங்களுக்கு பெயர் போன இவர், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தன் குடும்பத்தை சேர்ந்தவர்களை கூட சிறையில் அடைத்தவர்.
இவர், பெண்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் ஈடுபடும் ஆண்களுக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் பல லட்சம் ரூபாய் அபராதம் என்ற சட்டத்தையும் விரைவில் இயற்றவுள்ளார். இவரது நடவடிக்கைகளுக்கு உலகம் முழுதும் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.
இந்த நிலையில் இளவரசரின் இந்த செயல்களுக்கு அல்கொய்தா தீவிரவாத அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அல்கொய்தா விடுத்துள்ள எச்சரிக்கையில், சவூதி இளவரசர் பெண்களுக்கு தேவையில்லாத சுதந்திரம் கொடுக்கிறார், மேற்கத்திய கலாச்சாரத்தை புகுத்தி இஸ்லாமிய நாட்டை நாசம் செய்கிறார். அவர் உடனே தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளது.