லக்னோ
பிரதமர் மோடியின் ஆட்சியையும் ஹிட்லரின் ஆட்சியையும் ஒப்பிட்டு அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.
நேற்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம்,
” இம்முறை தேர்தலில் அரசியலமைப்பைப் பாதுகாக்க விரும்புபவர்கள் ஒரு அணியாகவும் மறுபுறம், அரசியலமைப்பை முடிவுக்குக் கொண்டு வர விரும்புபவர்களும் உள்ளனர். இந்த தேர்தல் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றும் வகையில் இருக்கும். இதன் முடிவுகள் இட ஒதுக்கீட்டைக் காப்பாற்றும் வகையிலும், தன் மானத்தைக் காப்பாற்றும் வகையிலும் இருக்கும்.
மக்கள் மத்திய பாஜக அரசுக்கு விடைகொடுக்கத் தயாராகிவிட்டார்கள். கடந்த 2014-ம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்தவர்கள். 2024-ம் ஆண்டு ஆட்சியை விட்டு வெளியே செல்கிறார்கள். ஏற்கனவே ஹிட்லரின் ஆட்சி 10 ஆண்டு காலம்தான் இருந்தது. அதைப் போல் மத்திய பாஜக ஆட்சியும் இந்த 10 ஆண்டுகளுடன் முடிவடைகிறது.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நாட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயம் என்பதால் குறைந்த விலையில்லா சலுகையை அமல்படுத்தி சட்டப்பூர்வமா உத்தரவாதம் அளிக்க வேண்டும். விவசாயமும், விவசாயிகளும் அழிந்தால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.”
என்று கூறினார்.