டெல்லியில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் காற்று மாசு மீண்டும் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலம் தொடங்கி குளிர்காலம் வரும்போது, டெல்லியின் காற்று மாசு தேசிய அளவில் விவாதமாக மாறுகிறது.

காற்று மாசால் அதிகம் பாதிக்கப்படும் நகரமாக டெல்லி உள்ளபோதும் அதிகம் பேசப்படாத தெற்கு மற்றும் மேற்கு இந்திய நகரங்களிலும் சமீப காலமாக காற்று மாசு அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் நிதி தலைநகரான மும்பையில் காற்று மாசு அதிகரித்தது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது, மும்பையின் காற்றுத் தரம் பெரும்பாலும் ‘மிதமான’ (Moderate) நிலையில் இருந்தாலும், சமீப நாட்களில் வானம் புகைமூட்டமாகக் காணப்படுகிறது, காலை வானம் தெளிவற்ற நிலையில் மங்கலாக உள்ளதாகவும் மக்கள் சுவாச பிரச்சினை குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.

சமீப நாட்களில் மும்பையின் காற்றின் தரக் குறியீடு (AQI) 250-300-ஐ எட்டியுள்ளது, காற்றுமாசு அதிகரித்திருப்பதை அடுத்து மும்பை மாநகராட்சி GRAP 4-ஐ அமல்படுத்தி, டிசம்பர் 1 அன்று அனைத்து கட்டுமான நடவடிக்கைகளுக்கும் தடை விதித்தது. பணிகளை உடனடியாக நிறுத்தும்படி 50 இடங்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்டன, மேலும் முழுமையான அமலாக்கத்தை உறுதிசெய்ய பறக்கும் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

ஜிஆர்ஏபி-யில் நான்கு நிலைகள் உள்ளன, ஒவ்வொன்றும் அந்தந்த நேரத்தின் காற்றுத் தரக் குறியீட்டுடன் (AQI) இணைக்கப்பட்டுள்ளன.

காற்றுத் தரக் குறியீடு 201-300 ஆக இருக்கும்போது அல்லது காற்றின் தரம் ‘மோசம்’ என்று வகைப்படுத்தப்படும்போது, ​​ஜிஆர்ஏபி-I அல்லது இந்த செயல்முறையின் முதல் நிலை தொடங்குகிறது. காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ ஆகும்போது அல்லது காற்றுத் தரக் குறியீடு 301-400 ஆக இருக்கும்போது இரண்டாவது நிலை செயல்படுத்தப்படுகிறது. மாசுபாடு ‘கடுமையான’ நிலையில் இருக்கும்போது அல்லது காற்றுத் தரக் குறியீடு 401-450 ஆக இருக்கும்போது ஜிஆர்ஏபி-III நிலை அடையப்படுகிறது.

ஜிஆர்ஏபி-IV-இன் போது, ​​நிலைமைகள் ‘கடுமையான+’ வரம்பிற்குள் நுழைகின்றன (காற்றுத் தரக் குறியீடு 450-க்கு மேல்).

மும்பையைத் தொடர்ந்து தென்னிந்தியாவின் மற்ற பகுதிகளிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது.

ஹைதராபாத், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களின் காற்றின் தரம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நவம்பர் இறுதி வாரத்தில் ஹைதராபாத் நகரின் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு (AQI) 200-ஐத் தாண்டியது.

சென்னையில் AQI 165ஆக உள்ளது, பெங்களூரிலும் காற்றின் தரக் குறியீடு 110ஐ தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

காற்று மாசுபாடு அபாயகரமான நிலைகளுக்கு உயரும் இந்த போக்கு பெரிய நகரங்களுக்கு மட்டுமல்லாது இந்த தாக்கம் தென்னிந்தியாவில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் காணப்படுகிறது.

2022-ல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய ஒரு பகுப்பாய்வின்படி, தென்னிந்திய நகரங்களில் காற்று மாசுபாடு பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்குக் கீழே இருந்தாலும், குறிப்பாக குளிர்காலத்தில் நச்சுத்தன்மை அதிகரிப்பதால், அந்த முன்னேற்றத்தை இழந்து வருகிறது. கடல் மற்றும் நல்ல காற்றோட்டமான சூழல் காரணமாக, காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதில் தென்னிந்திய மாநிலங்கள் வட இந்தியாவை விட ஒரு சாதகமான நிலையில் உள்ளன.

அதேவேளையில், குளிகாலத்தில் தரைக்கு அருகே இருக்கும் குளிர்ந்த மாசு நிறைந்த காற்று மேலே செல்லமுடியாத வகையில் மேலிருக்கும் வெப்ப காற்று மூடிபோல் தடுக்கிறது.

இதனால மாசுக் காற்று வெளியே செல்ல முடியாமல், அதே இடத்திலேயே தேங்கி நிற்கிறது, தவிர காற்றும் குறைவாக இருப்பதால், மழையும் சரியாக பெய்யாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற வானிலை காரணங்களால், காற்றில் தீங்கான தூசு, புகை அதிகமா சேர்ந்து, மாசு இன்னும் மோசமாவதாகக் கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]