சென்னை: அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கூட்டணி ஆட்சி குறித்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுக பாஜக இடையே, இருந்த கூட்டணி கடந்த சட்டமன்ற தேர்தலோடு முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது. இருதரப்பும் தனித்தனியாக நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட நிலையில், பெரும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, இரண்டு ஆண்டு கால பிரிவுக்கு பிறகு, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கில், 2025 ஏப்ரல் மாதம் அதிமுக – பாஜக கூட்டணி உருவானது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்து, எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக தலைவர்களிடம் பேசி கூட்டணியை உறுதி செய்தார். இதையடுத்து, அதிமுகவை அனுசரித்து போகும் வகையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
இந்த கூட்டணி உருவானதும் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்தார். இது தமிழக அரசியல் களத்தில் விவாதப்பொருளானது. பாஜகவும் பங்கேற்கும் கூட்டணி ஆட்சியா, அதிமுக தலைமையில் தனிப் பெரும்பான்மை ஆட்சியா ? என்று விவாதங்கள் தொடங்கின.
கூட்டணி ஆட்சி என்ற பதம் தம்மை பலவீனப்படுத்தும் என்று கருதிய அதிமுக அந்த கருத்தில் இருந்து விலகி நின்றது. அதிமுக தனித்தே ஆட்சிஅமைக்கும் என்று கூறி வருகிறது. பாஜக அதிமுக கூட்டணி சேர்ந்தால் வாக்க வங்கி அதிகரிக்கும் என்று கணக்கு போடும் அதிமுக, பாஜகவுடன் கொள்கை அணியாக அதை முன்னிறுத்துவதில் தயக்கம் காண்பித்து வருகிறது.
கூட்டணியில் பெரிய கட்சியாக அதிமுக இருப்பதால், கூட்டணிக்கு தலைமையேற்று தொகுதிப் பங்கீடுகளை முடிவு செய்யும் என்று அதிமுக பொதுச் செயலாளர் கூறியிருந்தார். அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என எடப்பாடி உள்பட அதிமுக தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தனியார் செய்தி ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, மீண்டும் அதிமுக தலைமையிலான கூட்டணிஆட்சியில் பாஜக இடம்பெறும் என்று கூறி உள்ளார். பாஜகவுடன் கூட்டணி மட்டுமே என்று அதிமுகவினர் கூறிவரும் நிலையில், ஆட்சியிலும் இருப்போம் என்று பாஜகவினர் கூறிவந்தனர். தற்போது அமித் ஷாவும் இதனை உறுதி செய்யும்விதமாக இவ்வாறு கூறியுள்ளார். அமித்ஷாவின் கருத்து அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “நான்தான் ஏற்கெனவே சொல்லிவிட்டேனே! தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்று பதிலடி கொடுத்தள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களுடன் பேசிய மத்திய இணையமைச்சர் எல். முருகன், கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு என்று கூறியுள்ளார்.
அமித் ஷாவின் கருத்தும் எடப்பாடி பழனிசாமியின் பதிலும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளதால், அதிமுக பாஜக கூட்டணி தேறுமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.