சென்னை: அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி இன்று காலை 11 மணிக்கு மேல் தொடங்கியது. இந்த பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 1 நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அ சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் இன்று காலை 11 மணிக்கு, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இபிஎஸ்-ஓபிஎஸ் முன்னிலையில் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட 300-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இதனால், வானகரம் பகுதியே தோரணங்கள், பேனர்களால் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்த பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி,
- நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு
- இலங்கையில் மகாண சபைகள் முறை ரத்து செய்யப்படுவதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம்
- நாடு தழுவிய அளவில் சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலமாக தமிழகத்தை முன்னேற்றிய முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு பாராட்டு
- நகர்புற வீட்டு வசதித் திட்டத்தில் தமிழகத்தையும் சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
- உலக முதலீட்டாளர் மாநாடு நடத்திய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்
- தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி
- ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைத்து வரும் தமிழக அரசை பாராட்டி தீர்மானம்
- தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத முன்னுரிமை எனும் நெறிமுறையை முறைப்படுத்திய தமிழக அரசுக்கு அதிமுக பொதுக்குழு பாராட்டு
- தனியார் மருத்துவக்கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்று இருப்பதற்கு பாராட்டு
- தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் அமைத்துள்ள தமிழக அரசுக்கு அதிமுக பொதுக்குழு பாராட்டு
- பொங்கல் பரிசுத் தொகையாக 2500 ரூபாய் வழங்கும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்
- கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு அதிமுக பொதுக்குழு பாராட்டு
- அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளதை பொதுக்குழு ஏற்கிறது
- கூட்டணி, தேர்தல் வியூகம், தொகுதிப் பங்கீடு குறித்த முடிவெடுக்க ஓபிஎஸ் – இபிஎஸ்சுக்கு முழு அதிகாரம்
- தமிழ்நாட்டில் ஒரே குடும்பத்தின் ஏக போக, வாரிசு அரசியலை வீழ்த்துவது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
கழக செயற்குழு – பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விவரம்.