‘சென்னை:  தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக – பாஜக  மற்றும் கூட்டணிகட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம்  இன்று மாலை கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையொட்டி, தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்   இன்று தமிழ்நாடு வருகை தருகிறார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  அதிமுக – பாஜக கூட்டணியில், பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து கடந்தசில நாட்களாக பேசசுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பல முறை டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக தலைவர்களை சந்தித்து பேசி வந்தார். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களும் டெல்லி சென்று வந்தனர். இதில் உடன்பாடு எட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து,  கூட்டணி மற்றும் தொகுதி பங்கிடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக   பாஜக மேலிட பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று  தமிழ்நாடு வருகை தருகிறார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல்   மார்ச் 30ந்தேதி தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள் ஏப்ரல் 06ந்தேதி. இதையடுத்து வேட்பு மனு பரிசீலனை – ஏப்ரல் 07ந்தேதியும், வேட்பு மனுத் திரும்பப் பெற இறுதி நாள் ஏப்ரல் 09ந்தேதி என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தேர்தல் களம் தகதகவென தகிக்கத் தொடங்கி உள்ளது.

திமுக கூட்டணியில்  கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதுடன், வேட்பாளர் நேர்காணலும் நடைபெற்று வருகிறது. ஆனால், அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இதுவரை தொகுதி ஒதுக்கீடு குறித்தும், வேட்பாளர்கள் நேர் காணல் குறித்தும் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில்,  தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்  இன்று (மார்ச் 21) சென்னை வருகிறார்.  இதைத்தொடர்ந்து.,  அதிமுக – பாஜக இடையே  தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மார்ச் 30 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளதால் இந்த வாரத்தில் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]