டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உறுப்புகள் சேதமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அஹ்மத் படேல் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையாநாயுடு, பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
குஜராத் மாநில பாஜகவுக்கு சிம்மசொப்பனாக திகழ்ந்த அகமது பட்டேல், மறைந்தமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராகவும், சோனியாவின் அரசியல் ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார். தற்போது குஜராத் மாநில எம்.பியாக உள்ள நிலையில், கொரோனாதொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெறுகிறது.
இந்ம நிலையில், அகமது படேல் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மல்லிகார்ஜூன கார்கே எம்பி, முன்னாள் மந்திரி ஜிதின் பிரசாதா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகரி, திமுக எம்.பி. கனிமொழி எம்பி, அபிஷேக் சிங்வி, மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேல் இல்லை என்பதை அறிந்து மனவேதனை அடைந்தேன். அவர் ஒரு புத்திசாலித்தனமான நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு வெகுஜனத் தலைவர்.. அவரது நட்பு அவரை கட்சி வழிகளில் நண்பர்களை வென்றது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கல்.
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாநிலங்களவை எம்.பி., ஸ்ரீ அகமது படேல் காலமானதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவர் ஒரு திறமையான நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார், அரசியல் தலைவர்களுடன் எப்போதும் நல்லுறவைப் பேணி வந்தார். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் , அவருக்கு குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அகமது படேல்ஜி மறைந்ததில் வருத்தம் அளிப்பதாகவும், அவர் பொது வாழ்க்கையில் பல ஆண்டுகளாக இந்த சமூகத்திற்காக சேவை செய்தார். , காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதில் அவர் வகித்த பங்கு எப்போதும் நினைவில் இருக்கும். அகமது பாயின் ஆத்மா நிம்மதியாக இருக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் மரணம் குறித்த தகவல்கள் வருத்தமாக உள்ளன. காங்கிரஸ் கட்சி மற்றும் பொது வாழ்க்கையில் அகமது படேல் ஜி ஒரு பெரிய பங்களிப்பை வழங்கினார். இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தனது முழு வாழ்க்கையையும் காங்கிரசுக்கு அர்ப்பணித்த அகமது படேலை இழந்துவிட்டதாகவும், ஈடுசெய்ய முடியாத நண்பர், விசுவாசமுள்ள தொண்டரை இழந்துவிட்டதாகவும்., அகமது பட்டேல் மறைவால் துயரத்தில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இன்று ஒரு சோகமான நாள். காங்கிரஸ் கட்சியின் தூணாக விளங்கிய பெரும் தலைவர்கள் 2 பேர் அடுத்தடுத்து நம்மை விட்டுபிரிந்து சென்றுள்ளனர். அவர்கள் சோதனையான காலங்களில் கட்சியுடன் இணைந்து செயலாற்றியவர்கள் என தெரிவித்துள்ளார்.