நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில், முக்கிய அமைச்சர்களின் தொகுதிகளில், ஆளுங்கட்சியான அதிமுகவின் வாக்கு சதவீதத்தில் 20% முதல் 30% வரை சரிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அமைச்சர் ஜெயக்குமாரின் ராயபுரம் சட்டமன்ற தொகுதி(வடசென்னை மக்களவை), அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை சட்டமன்ற தொகுதி (கரூர் மக்களவை), அமைச்சர் சீனிவாசனின் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி (திண்டுக்கல் மக்களவை), அமைச்சர் பாண்டியராஜனின் ஆவடி சட்டமன்ற தொகுதி (திருவள்ளூர் மக்களவை), அமைச்சர் வேலுமணியின் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி (பொள்ளாச்சி மக்களவை), அமைச்சர் காமராஜின் நன்னிலம் சட்டமன்ற தொகுதி (நாகப்பட்டினம் மக்களவை), அமைச்சர் தங்கமணியின் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி (ஈரோடு மக்களவை), அமைச்சர் செல்லூர் ராஜுவின் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி (மதுரை மக்களவை), அமைச்சர் உதயகுமாரின் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி (விருதுநகர் மக்களவை) உள்ளிட்ட தொகுதிகள் அனைத்திலும் நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் கணிசமான அளவில் குறைந்துள்ளன.
இதையெல்லாம்விட, முதலமைச்சர் பழனிச்சாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியிலேயே திமுக அதிக வாக்குகளை வாங்கியுள்ளது. அதேசமயம், தேனி மக்களவைக்கு உட்பட்ட துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் போடி தொகுதியில் மட்டும் அதிமுக அதிக வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.