சென்னை: தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களில்வ நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளைக்கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்து உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில், சேலம் பெரியார் , மதுரை காமராசர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இதையடுத்து, பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு அமைத்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் கடந்த ஆண்டுகளில் தகுதியற்ற நபர்களுக்கு முறைகேடாக பதவி உயர்வுகள் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து தமிழக அரசு உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது உயர்கல்வித்துறை விசாரணை அலுவலர்களை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
உயர் கல்வித்துறை துணை செயலாளர் சங்கீதா ஐ ஏ எஸ் மற்றும் உயர்கல்வித் துறை இணை செயலாளர் இளங்கோ ஹென்றி தாமஸ் ஐ.ஏ.எஸ் ஆகியோர் விசாரணை அலுவலர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக மூன்று மாத காலத்திற்குள் இந்த குழு தமிழக அரசிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.