அபுதாபி:
3 லட்சம் திர்ஹாம் லஞ்சம் வாங்கிய 2 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அபுதாபி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எரிசக்தி நிறுவனத்தில் பணியாற்றிய எமிரேட்ஸ் குடியுரிமை பெற்ற ஒரு நபரும், அரேபியரும் இணைந்து நிறுவனத்தின் டெண்டர் தகவல்களை மற்றொரு நிறுவனத்திற்கு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக 3 லட்சம் திர்ஹாம் லஞ்சம் பெற்றுள்ளனர்.
இதில் அரேபியர் வெளிநாட்டில் உள்ளார். எமிரேட்ஸ் குடியுரிமை பெற்ற நபரிடம் அபுதாபி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. தான் 1.6 லட்சம் திர்ஹாம் சம்பளம் பெறுவதாகவும், குறிப்பிட்ட அந்த நிறுவனத்தினர் கொடுத்த லஞ்சத்தை அவர்களிடமே வீசிவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால், அவர் லஞ்சம் பெற்றதற்காக புகைப்பட ஆதாரம் தெளிவாக இருந்தது. இதையடுத்து இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையும், லஞ்சம் பெற்ற தொகையை அபராதமாகவும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.