ராமநாதபுரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பனம்  செய்யவும், மற்றும் புனித நீராடி கோவிலில் தரிசனம் செய்யவும், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்  ராமேஸ்வரம் கோயிலில் குவிந்துள்ளனர். இதையடுத்து அங்கு பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தட்சணாயன புண்ணிய காலத்தில் வருகிற முதல் அமாவாசையான ஆடி அமாவாசையன்று தங்கள் மூதாதையர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் (பிதுர்கடன்) கொடுத்தால் அது அவர்களை சென்று அடைகிறது என்பதும், நீர்நிலைகளில் எள், மாவு, பிண்டம் ஆகியவற்றை மீன்களுக்கு கொடுத்தால் நீரில் சேர்க்கும் பொருள் ஆவியாக போய் பித்ருக்களை சென்று அடையும் என்பது ஐதீகம்.

முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் திதி, தர்ப்பணம் பூஜை செய்து கடலில் புனித நீராடி, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடுவார்கள்.

இதன்படி, நடப்பு ஆண்டு ஆடி அமாவாசை நாளான புதன்கிழமை அதிகாலையிலேயே தர்ப்பணம் கொடுப்பதற்காக பல ஆயிரம்பேர் ராமேஸ்வரத்தில் திரண்டனர். இந்த வருடம் ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வந்துள்ளதால் சிறப்பு வாய்ந்ததாக கருதும் பக்தர்கள், இரண்டாவதாக உள்ள இந்த அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்பபனம் செய்யும் வகையில்,   ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் திதி, தர்ப்பணம் பூஜை செய்து கடலில் புனித நீராடி, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடுவார்கள்.   இன்று ஆடி முழு அமாவாசை என்பதால் பக்தர்கள், பூஜை செய்து நீராடினர். இதனால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல முக்கிய நீர்நிலைகளிலும் மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு, திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.

திருவரங்கம் அம்மாமண்டபம் பகுதியிலுள்ள காவிரியாற்றில் ஏராளமானோர் குவிந்தனர். மறைந்த தங்களின் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் விதமாக காவிரியாற்றில் நீராடினர். தர்ப்பணம் கொடுத்த பின்னர், அம்மாமண்டபம் பகுதியிலுள்ள ஏழைகளுக்கு அன்னதானம் செய்துவிட்டு சென்றனர். இதன் காரணமாக அம்மா மண்டபம் பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

ஆடி அமாவாசையை ஒட்டி கன்னியாகுமரி கடலில் தங்கள் முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்பணம் செய்தனர். பின்னர் கடற்கரை அருகே அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி அமாவாசையையொட்டி திருவையாறு காவிரிக்கரை புஷ்ப மண்டப படித்துறையில் குவிந்த மக்கள், முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ஆடி அமாவாசை நாளான  இன்று அதிகாலை தொடங்கி நீராடல் நடைபெற்றது. கோடியக்கரை கடல் பகுதி முழுக்குத்துறையில் நீராடிய மக்கள் தங்களது முன்னோர்கள் தர்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள், அங்குள்ள சித்தர் பீடம், ராமர் பாதம் ஆகிய இடங்களில் வழிபட்டனர். இதேபோல், வேதாரண்யம் சன்னதிக் கடல் பகுதியிலும் மக்கள் நீராடி வழிபட்டனர்.