வாஷிங்டன்

லக கோடீசுவரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தம்மையும் கொரோனா தடுப்பூசியையும் இணைத்து வெளி வரும் செய்திகளை மறுத்துள்ளார்.

உலக செல்வந்தர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் தனது மனைவியுடன் இணைந்து ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த தொண்டு நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா சிகிச்சைக்காக  10 கோடி டாலர் நன்கொடை அளித்தது.  அத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார மையத்துக்கு 67.5 கோடி டாலர்களை அளித்தார். ஜூன் மாதம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு 1600 கோடி டாலர்கள்  நன்கொடை அளித்துள்ளார்.

இந்நிலையில் பில்கேட்ஸ் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு நன்கொடை அளித்தது அவருக்கே சிக்கலை உண்டாக்கியது.   இந்த தடுப்பூசி மூலம் உலக மக்களின் உடலில் ஒரு மைக்ரோ சிப் பொருத்தி அனைத்து மக்களின் நடவடிக்கைகளையும் பில்கேட்ஸ் முழுமையாக கண்காணிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியானது.   இந்த தகவலின் அடிப்படையில் நடந்த கணக்கெடுப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த 28% மக்கள் இந்த தகவலை உண்மை என நம்பி உள்ளனர்.  இது உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது குறித்து பில்கேட்ஸ், “அகில உலக அளவில் சுமார் 6 லட்சத்துக்கும் மேலானோர் கடந்த ஆறு மாதங்களில் உயிர் இழந்துள்ளனர்.   சுமார் 1.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் இதற்கு ஒரு முடிவு கட்ட விரும்பினேன்.  அதற்காக நான் நன்கொடைகள் அளித்தேன்.   மற்றபடி இந்த கொரோனா தடுப்பூசியைக் கொண்டு மக்களை நான் கண்காணிக்க உள்ளதாக வந்த தகவல் முழுக்க முழுக்க தவறான தகவல் ஆகும்” என மறுத்துள்ளார்.