டில்லி
பிரதமர் மோடி தனது இமேஜை 100% உயர்த்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்திய எல்லையான லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படைகள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிர் இழந்தனர். இதையொட்டி சீனா மீது நாடெங்கும் கடும் கண்டனம் எழுந்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி சீன இந்திய உறவு குறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் 2 நிமிட வீடியோவையும் ஒரு செய்தியையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ராகுல் காந்தி,”சீனாவை சரியான பார்வை குறிப்பாக உலகளாவிய பார்வை இல்லாமல் சரியான முறையில் கையாள முடியாது. நமது நாட்டு அரசியலில் நாம் நமக்குள்ளேயே போரிட்டு ஒரு இந்தியர் மற்றொரு இந்தியருடன் சண்டையிட்டு வருகிறோம். இது நம்மிடம் வளர்ச்சி அடைய எந்த ஒரு தெளிவான பார்வையையும் இல்லை என்பதைக் காட்டுகிறது” எனக் கூறி உள்ளார்.
ராகுல் காந்தி தனது பதிவில், “பிரதமர் மோடி தனது இமஏஜை 100% உயர்த்துவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். பல நிறுவனங்கள் இந்தியாவில் இந்த பணிகளைச் செய்வதில் ஈடுபட்டு வருகின்றன. எப்போதும் ஒரு மனிதரின் இமேஜ் என்பது தேசிய பார்வைக்கு மாற்றாக இருக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.