அயோத்தி
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்ட நிர்ணயிக்கப்பட்ட நேரம் நல்ல நேரம் இல்லை என ஜியோதிஷ்பீட சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்காக மத்திய அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவுக்கு ஸ்ரீராம ஜன்ம தீர்த்த ஷேத்திர டிரஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த குழு அமைத்ததில் இருந்தே ஜியோதிஷ்பீட சங்கராசாரியாரான ஸ்வரூபானந்த சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்தக் குழுவுக்கு சங்கராசாரிய பீடாதிபதி என்னும் முறையில் தாம் தலைவராக இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்த்ததாகவும் அது நடைபெறாததால் அவர் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தக் குழுவில் வாசுதேவானத் சரஸ்வதி சுவாமிகளை சங்கராச்சாரியாராகச் சேர்த்ததற்கும், அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் இந்தக் குழு கோவிலுக்கு அடிக்கல் நாட்ட ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் கலந்துக் கொள்ளப் பிரதமர் மோடி வருகை தர உள்ளார். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த விழாவுக்கு 150 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
விழா குறித்து ஸ்வரூபானந்த சரஸ்வதி.”நான் இந்த ராமர் கோவில் அமைப்புக்குழுவில் எந்த பதவியையும் வகிக்க விரும்பவில்லை இந்த கோவில் சரியான முறையில் கட்டப்பட வேண்டும் என்பதையும் அடிக்கல் நாட்டும் விழா ஒரு சுப வேளையில் நடக்கவேண்டும் என்பதையும் விரும்புகிறேன். அடிக்கல் நாட்டு விழா நேரம் நல்ல நேரம் இல்லை. அது அசுபமான நேரம்” எனத் தெரிவித்துள்ளார்.