டில்லி
இந்திய ரயில்வேயின் தனியார் ரயில் திட்டத்தில் பங்கு பெற பெல், பாம்பரிடர் உள்ளிட்ட 16 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்திய ரயில்வே 151 தனியார் ரயில்களை அறிமுகம் செய்ய உள்ளது, இந்த ரயில்கள் 20223-23 ஆம் வருடம் முதல் கட்டமாக 12 ரயில்கள் அறிமுகமாகிறது. அதன்பிறகு 2023-24 ஆம் வருடம் 45, 2025-26 ஆம் வருடம் 50 ,மீதமுள்ளவை அதற்கு அடுத்த ஆண்டு என அறிமுகமாக உள்ளது வரும் 2026-27 ஆம் வருடத்துக்குள் 151 ரயில்களும் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கூட்டம் ஒன்று சமீபத்தில் நடந்தது. இதில் 16 நிறுவனங்கள் கலந்துக் கொண்டன. அவை ஜிஎம் ஆர் குழுமம், பாம்பார்டியர், பெல், மேதா குழுமம்,ஆர்கே அசோசியேட்ஸ், உள்ளிட்டவை ஆகும் .இதைத் தவிர ஸ்பானிஷ் கோச் போன்ற நிறுவனங்களும் கலந்துக் கொண்டன. இவை அனைத்தும் இந்த திட்டத்தில் கலந்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்த திட்டத்தின் மூலம் இந்திய ரயில்வே ரூ.30,000 கோடி முதலீட்டை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் இரு கட்டமாக அதாவது முதலில் தகுதிக்கு விண்ணப்பித்தல் மற்றும் இரண்டாவதாக விலை அளித்தல் என நடைபெற உள்ளது.
இந்த சந்திப்பில் இந்த தனியார் ரயில் குறித்த அனைத்து அம்சங்களும் விவாதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அப்போது இதற்கான விளக்கங்களை இந்திய ரயில் அமைச்சக அதிகாரிகள், மற்றும் நிதி அயோக் அதிகாரிகள் அளித்துள்ளனர். இந்த விளக்கங்கள் பொதுவாகத் தகுதி விவரங்கள், டெண்டர் நடவடிக்கைகள், கொள்முதல்கள், ரயில் இயக்கம் உள்ளிட்டவை குறித்து அமைந்திருந்தன.
அடுத்ததாக நிறுத்தி வைக்கும் கட்டணம் குறித்த சந்தேகங்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என அறிவித்த அதிகாரிகள், இதற்கான சலுகைகள் இந்த ரயில்கள் இயங்கும் காலம் முழுவதும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த ரயில்கள் இயக்கத்துக்கான விண்ணப்பங்கள் முதல் கடமாக ஜூலை 31 அளிக்கப்படும் எனவும் அதன் பிறகு ஆகஸ்ட் 12 அன்று இதற்கான கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.