டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் குண்டர் ராஜ்ஜியம் நடப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டித்துள்ளார்.
காஜியாபாத்தில் பத்திரிகையாளர் விக்ரம் ஜோசியின் உறவு பெண்ணை அதே பகுதியை சேர்ந்த சிலர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விக்ரம் ஜோசியை அவரது இரு மகள்கள் கண்முன்னே மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடினர்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இந்த சம்பவத்தை காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக கண்டித்துள்ளார். டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர், மருமகளை சிலர் துன்புறுத்தியதை எதிர்த்ததற்காக பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தேர்தல் வாக்குறுதியில் அளித்த ராம ராஜ்ஜியத்துக்கு பதிலாக குண்டர் ராஜ்ஜியத்தை உத்தரப்பிரதேச அரசு வழங்கியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.