பிரம்மஹத்தி தோஷம், மனநோய் நீக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி

முன்பின் அறியாதவர்களுக்குப் பணத்திற்காகத் துன்பம் விளைவித்தல், நல்ல குடும்பத்தைப் பொல்லாங்கு சொல்லுதல், செய்வினை செய்தல், செய்வினை செய்பவர்களுக்குத் துணை போகுதல், திருமணத்திற்கு முன் உறவு கொண்டு பின் வேறு ஒருவரைத் திருமணம் செய்தல், திருமணத்திற்குப் பின் வேறொரு பெண்ணை அல்லது ஆணை விரும்புதல், நம்பிக்கை துரோகம் செய்தல், ஒருவன் செய்யாத தவறை செய்தான் என சொல்லும் பொய், பிராமணரைக் கொலை செய்தல், ஆகியவை பிரம்மஹத்தி தோஷமாகும்.
ஒருவருக்குப் புத்தி சுவாதீனம் ஏற்படுதல், நோய்களால் அவதிப்படுதல், செய்யாத குற்றத்திற்காகச் சிறை செல்லுதல், கணவன்-மனைவி பிரச்சினை, தொழிலில் பெரும் நஷ்டம் முதலியன பிரம்மஹத்தி தோஷத்தாலேயே ஏற்படுகின்றன.
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி :
வரகுண பாண்டியன் ஒட்டிக் கொண்டிருந்து வந்த குதிரை, வழியில் ஓர் அந்தணனை மிதித்துக் கொன்று விடப் பாண்டியனுக்கு பிரமஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதன் காரணமாக அநேக நேரங்களில் மனநிலை மாறி, தன் நிலை இழந்து திரிந்தான். பாண்டிய மன்னன், மதுரை சோமசுந்தரப் பெருமானை வணங்கி முறையிட அப்போது ஒலித்த அசரீரி, திருவிடைமருதூர் சென்று அங்குள்ள ஈசனை வழிபட்டால் நல்லது நடக்கும் என்று கூறியது. இதையடுத்து வரகுண பாண்டிய மன்னன் திருவிடைமருதூர் திருத்தலம் வந்தான்.
மகாலிங்க சுவாமியை வணங்குவதற்காகப் பாண்டியன் ஆலயத்துக்குள் பிரவேசித்தபோது, அவனைப் பற்றிக் கொண்டிருந்த பிரம்மஹத்தி, சக்தி மிக்க ஈசனின் முன் செல்ல அஞ்சிக் கொண்டு மன்னனை விட்டு வெளி வாசலிலேயே ஒதுங்கி நின்றது. வழிபாடு முடித்து மன்னன் திரும்பி வரும்போது, மீண்டும் அவனைப் பிடித்துக் கொள்ள எண்ணிய பிரம்மஹத்தி அங்கேயே காத்திருந்தது.
வரகுண பாண்டியன் மகாலிங்கத்தின் முன் நின்று வழிபட, பூரண குணமடைந்து தெளிவு பெற்றான். பிறகு இறைவனின் உத்தரவுப்படி, வந்த வழியே மீளாமல் வேறு வழியே வெளியே சென்று விட்டான். கோவில் ஆலயத்தின் வாசலில், தலையைச் சாய்த்தபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இருக்கும் கற்சிலை ஒன்று காணப்படுகிறது. அதைத்தான் பிரம்மஹத்தி வர்ணிக்கிறார்கள்.
இன்றும் மனநிலை சரியில்லாதவர்களை அழைத்து வந்து மகாலிங்கத்தின் முன் நிறுத்தி நம்பிக்கையுடன் தரிசனம் செய்பவர்கள் ஏராளம்.
கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ளது திருவிடைமருதூர்.
[youtube-feed feed=1]