(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!)

 
காந்தியார் விமர்சனத்திற்கு உட்படாதவரா?
அகில இந்தியளவில், காங்கிரசை ஒரு செல்வாக்கான மக்கள் இயக்கமாக மற்றும் கவர்ச்சிகரமான இயக்கமாக மாற்றியவராக, அரசியல் பார்வையாளர்களால் குறிப்பிடப்படுபவர் காந்தியடிகள். பீகாரின் சம்பரான் இயக்கம், இதற்கான ஒரு சரியான உதாரணம்!
ஒரு கட்டத்தில், கேள்வியெழுப்ப முடியாதவராகவும், நாட்டின் மாபெரும் ஐகானாகவும் மாறிவிடும் காந்தியின் செல்வாக்கில், இந்திய விடுதலைக்கான காலம் நெருங்க நெருங்க வீழ்ச்சி ஏற்படுகிறது. அவரின் பேச்சை, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கேட்பதற்கு தயாரில்லை! என்பது பொதுவான தகவல்.
ஆனால், சற்று ஆழமாக காங்கிரஸ் கதையைக் கேட்டால், காந்தியார் பல நேரங்களில் கேள்விக்குட்படுத்தப்பட்டவராகவே இருந்திருக்கிறார். அடித்தள மக்கள் மத்தியில் மகானாக கருதப்பட்ட அவர், காங்கிரசில் பிராமண, உயர்ஜாதி மற்றும் வேறு அரசியல் நோக்கங்கள் கொண்ட தலைவர்களின் எதிர்ப்புகளை எதிர்கொண்டே வந்துள்ளார்.

கடந்த 1920களிலேயே, காந்தியாரின் முடிவுகளுக்கு எதிராக, சுயராஜ்ய கட்சி தொடங்கப்பட்டு, தேர்தல்களில் பங்கேற்றது. சுயராஜ்ய கட்சியின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவர் சத்தியமூர்த்தி என்பது நமக்கு ஏற்கனவே தெரியும்.
காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்திற்கு தமிழக காங்கிரசில் போதுமான ஆதரவிருக்கவில்லை. காந்தியாரின் மனசாட்சி என்று கூறப்பட்ட ஆச்சாரியார்கூட, ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் தொடர்பாக காந்தியுடன் முரண்படுகிறார்.
கடைசியில், 1946ம் ஆண்டு தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ராஜாஜிதான் சென்னை மாகாண முதல்வராக வரவேண்டுமென்ற தனது விருப்பத்தை வெளிப்படையாக காந்தியார் தெரிவித்தும்கூட, அதை செவிமடுக்க காமராஜர் தயாரில்லை!
காங்கிரஸ் கட்சிக்கு வெளியே என்று எடுத்துக்கொண்டால், காந்தியாரை அவர் புகழின் உச்சியில் இருக்கையில், கடுமையாக விமர்சித்து எதிர்த்தவர்கள் என்றால், வடக்கே அம்பேத்கரும், தெற்கே பெரியாரும்தான்!

நேருவின் ஆதரவை காமராஜருக்கு திருப்பிவிட்ட ராஜாஜி!
காந்தியின் காலத்தில் காங்கிரசில் செல்வாக்குடன் இருக்கும் ஆச்சாரியார், நேருவின் தொடக்ககால அமைச்சரவையிலும் இடம்பெறுகிறார். அதற்கு முன்பாக, நாட்டின் கவர்னர் ஜெனரல் பொறுப்பேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெறுகிறார். இதற்கெல்லாம் நேருவின் ஆதரவும் இருக்கிறது. ஆனால், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு பறிபோய்விடுகிறது.
பொருளாதாரம், வெளியுறவு மற்றும் இதர சில விஷயங்களில் தனக்கென தனிபாணி வைத்திருப்பவர் மற்றும் எண்ணங்களைக் கொண்டவர். மூதறிஞர், மாபெரும் சிந்தனையாளர், எதிர்காலத்தை கணிக்கும் ஞானி போன்ற பட்டங்களெல்லாம் இவருக்கு உண்டு!
(யாருக்கும் பொதுவாக கட்டுப்படாத ஒரு தனியான மனநிலைக் கொண்ட காரணத்தால்தான், தனது அரசியல் பயணத்தினூடே, சில சமயங்களில் அரசியல் ஓய்வை அறிவித்திருக்கிறார் ராஜாஜி.)

ஆனால், காங்கிரஸ் கட்சியில் ஏகபோக தலைவராக உருவாகிவிட்ட மற்றும் இந்தியாவின் ஆட்சியதிகாரத்தையும் பிடித்துவிட்ட ஜவஹர்லால் நேருவின் அரசாங்கத்தை பல விதங்களில் விமர்சித்து வந்தால் எப்படி?
ராஜாஜியின் இத்தகைய அரசியல் போக்கு, தமிழகத்தில், காமராஜருக்கான நேருவின் ஆதரவை இயல்பாகவே அதிகரிக்கச் செய்யும்தானே..! நேரு பாணி சோஷலிசத்திற்கு காமராஜரின் முழு ஆதரவு எப்போதுமே உண்டு. 1952ம் ஆண்டு சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி பதவியேற்பதில்கூட, நேருவுக்கு பெரியளவில் விருப்பமில்லை. எனவேதான், தேர்தலில் போட்டியிட்டு வென்றாக வேண்டுமென்ற ஒரு நெருக்கடியை சைக்கிள் கேப்பில் ராஜாஜி பக்கம் தள்ளிவிடுகிறார் நேரு. ஆனால், குமாரசாமி ராஜாவின் பரிந்துரையால் எம்எல்சி பதவியேற்று தப்புகிறார் ராஜாஜி.
முதல்வர் பதவியிலிருந்து ராஜாஜி மறைமுகமாக இறக்கப்பட்டவுடன், தமிழக காங்கிரஸில் அவரால் குறிப்பிட்டு எதையும் செய்ய முடியவில்லை. காமராஜரின் கொடிதான் பறக்கிறது. அகில இந்திய தலைமையையும் பகைத்துக்கொண்ட ராஜாஜியால் என்ன செய்துவிட முடியும்?
இதனால்தான், தனிக்கட்சி, சித்தாந்த எதிரிகளுடன் கூட்டணி என்று பயணித்து, காமராஜரை வேறுவகையில் பழிதீர்க்கிறார் ஆச்சாரியார்!
காமராஜருக்கு கட்சிப் பதவியில்தான் அதிக ஆர்வமோ..!
கடந்த 1940ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராகி, தான் மரணிக்கும் 1975வரை, மொத்தம் 35 ஆண்டுகள் தமிழக காங்கிரஸ் என்றால், ‘அது தான்தான்’ என்ற அளவில் கோலோச்சிய காமராஜர், அரசுப் பதவியின் தலைமை அதிகாரத்தில்(முதல்வர்) இருந்தது வெறும் 9 ஆண்டுகள்தான் என்பதை இங்கே ஆய்வுக்கு கொண்டுவர வேண்டியுள்ளது.

இன்னும் 4 ஆண்டுகள் பதவிகாலம் மீதமிருக்கையில், பலருக்கும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அளிக்கும் விதமாக, 1963ம் ஆண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் காமராஜர். இவர், 1946ம் ஆண்டே சென்னை மாகாண முதல்வர் பதவியேற்க முயற்சிக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. டி.பிரகாசம், இரண்டுமுறை முதல்வராக பதவி வகித்த ஓமந்தூரார், குமாராசாமி ராஜா ஆகியோரையெல்லாம் தன் கட்டுப்பாட்டில் வைத்தோ அல்லது பதவியை விட்டு இறக்கவோ தெரிந்தவருக்கு, தான் முதல்வராக இருந்திருக்க முடியாதா? என்ற கேள்வி சாதாரணமானதே.
இவர் விரும்பியிருந்தால், தமிழக காங்கிரசின் செல்வாக்கான நபர் என்ற முறையில், நேருவின் தொடக்க கால அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்க வாய்ப்புண்டு! 1952ம் ஆண்டில்கூட இவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டபோதும், நேருவின் அமைச்சரவையில் இடம்பெறவில்லை.
இவர், முதல்வராக இல்லாத காலங்களில், மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. இவையெல்லாம், தனக்கு கட்சியில் மட்டுமல்ல, மக்கள் மத்தியிலும் எப்போதும் செல்வாக்கு உண்டு என்பதை காட்டுவதற்காக கூட இருக்கலாம்!
ஒருவேளை, முதல்வர், கட்சித் தலைவர், பிரதமர் போன்ற தலைமைப் பதவிகளின் மீதுதான் இவருக்கு ஆர்வம் இருந்திருக்கும் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. அப்படியே பார்த்தாலும்கூட, இன்னும் அதிக பதவிகாலம் மீதமிருக்கையில், தேவையில்லாமல் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
ஒருவேளை, அகில இந்திய அளவில், காங்கிரஸ் கட்சியில் அன்றைய நாட்களில் நிகழ்ந்த மாற்றங்கள், நேருவின் வயோதிகம் ஆகியவற்றை தனது அரசியல் மதிநுட்பத்தால் கணக்கிட்டு, இப்போது மாநில அளவிலான முதல்வர் பதவியை உதறிவிட்டுச் சென்றால், தேசியளவில் பெரிய கெளரவம் கிடைக்கும் என்று இவர் சரியாக யூகித்திருக்கலாம்!
தான் விரும்பிய வகையிலான ஒத்துழைப்பு இந்திரா காந்தியிடமிருந்து கிடைத்திருந்தால், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் காமராஜர் இன்னும் தொடர்ந்து இருந்திருப்பார்..! ஆனால், கூட்டு தலைமைத்துவத்தில், கவர்ச்சிகரமான அரசியல் செல்வாக்கு இல்லாத லால் பகதூர் சாஸ்திரியே நம்பிக்கை வைக்காதபோது, அந்த செல்வாக்கு அமையப்பெற்ற இந்திரா காந்தி நம்பிக்கை வைப்பாரா என்ன..!?
தான் முதல்வராக பதவி வகித்த காலத்திலும்கூட, திமுகவினர் உள்ளிட்டோரின் சட்டசபை வார்த்தை ஜாலங்களை எதிர்கொள்வதில் அதிக ஆர்வமில்லாதவராக இருந்துள்ளார் காமராஜர். அந்த விஷயங்களை கையாளும் பொறுப்பை, சி.சுப்ரமணியம் மற்றும் பக்தவச்சலம் போன்றவர்களிடம் விட்டுவிட்டு, இவர் களப்பணிகளில்தான் ஆர்வம் காட்டியிருக்கிறார்.

சுற்றிவளைத்து, வழவழா மற்றும் கொழகொழாவென்பதெல்லாம் இவருக்கு ஒத்துவராத விஷயங்கள்! நேரடியாக விஷயத்தைப் பேசி, காரியத்தில் இறங்குவதில்தான் இவருக்கு ஆர்வம். அரசியலில் ‘ரொமான்டிசிஸம்’ என்பதெல்லாம் இவருக்கு ஒத்துவராத அம்சம்! எனவேதான், தன் சுபாவத்திற்கு, அரசின் தலைமைப் பதவிகளைவிட, கட்சியின் தலைமைப் பதவிதான் ஏற்றது என்று அவர் முடிவு செய்திருக்கலாம். தான், ‘கிங்’ என்ற நிலையில் இருப்பதைவிட, ‘கிங் மேக்கர்’ என்ற நிலையில் இருப்பதையே அவர் விரும்பியிருக்கிறார்!
நாளை மீண்டும் படிக்கலாம்
 
– மதுரை மாயாண்டி