ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாஜக ஒரு போதும் நம்பிக்கை வாக்கெடுப்பை கோரவில்லை என்று அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் கட்டாரியா கூறி உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவருக்கும் துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையேயான கருத்து மோதலால் கட்சியில் பிளவு ஏற்பட்டது.
பைலட் பதவியும் அவருடைய ஆதரவாளர்கள் 2 பேரின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. பைலட் உட்பட 18 எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்யவும் ராஜஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை, கெலாட் சந்தித்து பேசினார்.
இதையடுத்து அடுத்த வாரம் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிகிறது. பைலட் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டால், கெலாட் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.
இந் நிலையில் பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பை கோரவில்லை என்று அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் கட்டாரியா கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: நாங்கள் இப்போதும் நம்பிக்கை வாக்கெடுப்பை கேட்கவில்லை. அவர்களின் சண்டையை நாங்கள் கவனமாக பார்த்து வருகிறோம். சரியான நேரம் வரும்போது ஏதாவது செய்வோம். கலந்து பேசி உரிய நடவடிக்கையை எடுப்போம். இப்போது தேவையில்லாமல் எங்களை இதற்குள் இழுக்கிறார்கள் என்று கூறினார்.