(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!)

கடந்த 1962ம் ஆண்டு தேர்தல் அளித்த அதிர்ச்சியைவிட, 1963ம் ஆண்டு திருவண்ணாமலை சட்டமன்ற இடைத்தேர்தல் அளித்த அதிர்ச்சிதான் காமராஜருக்கு மிகப் பெரியதாக இருந்தது. தனது அமைச்சரவை சகாக்கள் பலரைக் கூட்டிவந்து, தீவிரப் பிரச்சாரத்தில் காமராஜர் ஈடுபட்டபோதும், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ப.உ.சண்முகம் வெல்கிறார்.
திருவண்ணாமலை இடைத்தேர்தல் முடிவுகள் வாயிலாக, காங்கிரஸ் வீழத் தொடங்கிவிட்டதை தெளிவாக உணரத் தொடங்கிய காமராஜர், அடுத்து மேற்கொண்ட முடிவுகள் தவறானவை என்பதை எதிர்காலம் உணர்த்தியது. அவர், டெல்லிக்குச் செல்லாமல், தமிழக அரசியலிலேயே தொடர்ந்து நிலைக்கொண்டிருந்திருந்தால், காங்கிரசுக்கு ஏற்பட்ட சேதத்தை தள்ளிப் போட்டிருக்கலாம் அல்லது குறைத்திருக்கலாம். ஆனால், காலங்கடந்து அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. மேலும், டெல்லியிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
கடந்த 1920கள் முதற்கொண்டே, பல்வேறு ஜாம்பவான்களை எதிர்கொண்டு, அரசியலில் வென்று வந்த காமராஜரால், பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் நிரம்பப்பெற்ற இளம் படையை(திமுக) எதிர்கொள்ள முடியவில்லை. காமராஜரிடம் அதற்கேற்ற ஒரு சரியான டீம் இல்லை என்றும் சொல்லலாம். அப்படியான ஒரு டீம், காங்கிரஸில் இருக்க முடியாதுதான். ஏனெனில், அக்கட்சியின் வரலாறு, பின்னணி மற்றும் பண்பாடு வேறானது. திமுகவினர், சினிமாத்துறையையும் வெற்றிகரமாக கையாண்டனர். பத்திரிகைகள் விஷயத்திலும் அவர்கள் சோடை போகவில்லை.
ஒருபுறம் நிலைமை இப்படியிருக்கையில், மறுபுறமோ, ராஜாஜியும், காமராஜர் மீதான தன் வன்மத்தை வற்றாமல் வைத்துக்கொண்டு, தேர்தல் கூட்டணிகளை அமைக்கிறார்.

திருவண்ணாமலை இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு, ‘கே பிளான்’ நடைமுறைக்கு வருகிறது. ஆனால், உண்மையில் இது ‘காமராஜ் பிளான்’ கிடையாது, நேருவின் பிளான்தான் என்று காங்கிரசிலேயே மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் விமர்சித்தார்கள். தனது மகள் இந்திராவிற்கு வழிவிடவும், தனது எதிர்ப்பாளர்களைத் தட்டிவைக்கவும் நேருவினால் சாமர்த்தியமாகக் கொண்டு வரப்பட்டதுதான் இந்த கே பிளான் என்பது அவர்களின் கூற்று. இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில், அதுதொடர்பான அரசியல் சம்பவங்கள் நடந்தன என்பதையும் மறுக்க இயலாது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்று, நேருவிற்கு பிறகான இரண்டு பிரதமர்களை தேர்வுசெய்தபோது, காமராஜருக்கே கூட, பிரதமராகும் வாய்ப்பு வந்தது என்றும், அதை அவர் மறுத்துவிட்டார் என்றும் சிலர் கூறக் கேட்டிருப்போம் அல்லது படித்திருப்போம். ஆனால், அரசியல் பார்வையில் பார்த்தால் அதில் உண்மையில்லை.
“நான் சொன்னா போடுவான்; ஆனா, நின்னா போடமாட்டான்” என்று காமராஜரே நிலைமையை உணர்ந்து உண்மையை பட்டவர்த்தனமாக சொல்லியிருக்கிறார். வட இந்தியர் ஆதிக்க அரசியலில், காமராஜரைப் போன்ற ஒரு தென்னாட்டவர், அன்றைய தனிக்கட்சி பெரும்பான்மையுள்ள அரசியல் நிலைமையில் பிரதமர் ஆவதெல்லாம் சாத்தியமில்லாத விஷயம். அப்படியே, ஆசைப்பட்டு அடித்துப்பிடித்து அவர் ஆகியிருந்தாலும்கூட, அவமானத்தையே சந்தித்திருப்பார்! இது அவருக்கும் தெரியாத ஒன்றல்ல!

அவர், அகில இந்திய காங்கிரஸ் தலைவரானதே எதிர்பாராத மற்றும் கடினமான ஒன்று எனக் கூறும் வகையில் சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆந்திரத்தின் சஞ்சீவ ரெட்டி, மராட்டியத்தின் எஸ்.கே.பட்டீல், மேற்கு வங்கத்தின் அதுல்யா கோஷ் மற்றும் தமிழகத்தின் காமராஜர் ஆகியோர் திருப்பதியில் சந்தித்து, வயதான நேருவுக்குப் பிறகான காங்கிரசின் எதிர்காலம் குறித்து சிந்திக்கின்றனர். இதன் பின்னணியில் உருவாவதுதான் ‘சிண்டிகேட்’.
வயதான நேருவால், அனைத்தையும் கட்டுப்படுத்த முடியாத நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அடுத்து யார் என்ற கேள்வி எழுகிறது. லால் பகதூர் சாஸ்திரி, காமராஜர் மற்றும் அதுல்யா கோஷ் ஆகிய மூன்று பேர் போட்டியில் இருக்கின்றனர்.
இதில், போட்டியிட விரும்பாமல், லால் பகதூர் சாஸ்திரி விலகிவிட, காமராஜர் மற்றும் அதுல்யா கோஷ் ஆகிய இருவரில் யார் என்ற கேள்வி எழ, அதுல்யா கோஷ் வருவதில் நேருவுக்கு விருப்பமில்லாத நிலையில், அடுத்து வேறு யார்? நம்ம ஆள்தான்!
நேருவுக்குப் பிறகு, சாஸ்திரி, சிண்டிகேட் அமைப்பால் பிரதமராக தேர்வுசெய்யப்பட்டாலும், அவருக்கும், காமராஜருக்கும் சரியாக ஒத்துப்போகவில்லை. மேலும், சாஸ்திரி இந்தி மொழி வெறியரும்கூட.

எனவே, அவருக்குப் பிறகு, தனக்கு தோதாக இருப்பார் என்று நேருவின் மகள் இந்திராவை தேர்வு செய்கிறார் காமராஜர். ஆனால், காமராஜர் தலைசுற்றி விழும் அளவிற்கு அரசியல் ஆட்டத்தை ஆடிவிடுகிறார் இந்திரா காந்தி! புதிய ரத்தம், புதிய சிந்தனைகள், மாறும் அரசியல் சூழலுக்கேற்ற பொருத்தமான ஆலோசகர்கள் என்று ஒரு கலக்கு கலக்கிய இந்திராவிடம், எந்தவகையிலும் மோத முடியவில்லை காமராஜரால்..! காமராஜரின் பழைய அரசியல் பாணி இங்கே ஒர்க்அவுட் ஆகவில்லை. சென்னையில் திமுக என்றால், டெல்லியில் இந்திரா..! பாவம் என்னதான் செய்வார் அவர்..?
எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு எனும்போது, காமராஜர் விதிவிலக்காக இருந்திருக்க வேண்டுமென்ற விருப்பமெல்லாம் நமக்கில்லை.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக 2 முறை தேர்வுசெய்யப்பட்ட காமராஜர், மூன்றாம் முறையாகவும் அப்பதவிக்கு வருவதற்கு, ஆதரவளிக்க தயாரில்லை இந்திரா காந்தி. தமிழகம் திரும்பும் காமராஜர் 1967 தேர்தலிலும் தோற்றுப் போகிறார்.
ஆனாலும், காங்கிரசில் சிண்டிகேட் பிரிவு தொடர்ந்து இயங்குகிறது. இந்திரா காந்திக்கு அவ்வப்போது குடைச்சல்களை கொடுத்தும் வருகிறது. இச்சூழலில், 1969ம் ஆண்டில் முதலமைச்சராகவும், திமுக தலைவராகவும் பொறுப்பேற்கும் கருணாநிதி, தமிழகத்தில் அப்போதும் செல்வாக்குப் பெற்று திகழும் காமராஜரை பலவீனப்படுத்துவதற்காக, இந்திரா காந்தியை பல வகைகளிலும் ஆதரிக்கிறார். மன்னர் மானிய ஒழிப்பு மற்றும் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட நிகழ்வுகள் இவற்றுள் முக்கியமானவை. மேலும், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளர் சஞ்சீவ ரெட்டிக்கு எதிராக, இந்திரா காந்தி நிறுத்தும் வி.வி.கிரிக்கும் ஆதரவளிக்கிறார் கருணாநிதி.

ஆனாலும், இந்திராவின் மீது, காமராஜருக்கு எப்போதுமே ஒரு பரிவு உண்டு. தான் இந்திராவால் தேசியளவில் வீழ்த்தப்பட்டாலும், அதன்பிறகான காலக்கட்டங்களில், இந்திராவை எதிர்த்து வடக்கில் எழுந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்திற்கு அவர் ஆதரவளிக்கவில்லை.
நெருக்கடி நிலையை காமராஜர் எதிர்த்தாலும், அவரைக் கைது செய்யுமாறு அன்றைய கலைஞர் அரசை இந்திரா காந்தி கேட்டுக்கொண்டாலும்கூட, அதன்பிறகான நாட்களில், அவரையும் இந்திராவையும் சந்திக்க வைக்க நடந்த முயற்சிகளுக்கு காமராஜர் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இந்திரா காந்தி – காமராஜர் சந்திப்பு விரைவில் நடைபெறும் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில், திடீரென மரணமடைகிறார் காமராஜர்.
நாட்டின் நலனுக்கு, காமராஜர் – இந்திரா ஒற்றுமை அவசியம் என்று கூறப்பட்ட காரணத்தால், இருவரும் மீண்டும் பேச்சு நடத்த சம்மதித்தார்கள் என்றெல்லாம் பதிவுகள் உள்ள நிலையில், ஒருவேளை காமராஜர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்திருந்தால், இதுதொடர்பாக எழும் ஒரு அடிப்படை முரண்பாட்டையும் பார்க்க வேண்டியுள்ளது.

அரசியலில், நேருவைவிட, தனித்துவ பாணியில் பயணிப்பதை அதிகம் விரும்பியவர் இந்திரா காந்தி. பிராந்திய அளவில், தலைவர்கள் தனித்த செல்வாக்குடன் கோலோச்சுவதை விரும்பாதவர் என்று மதிப்பிடப்பட்ட இந்திரா காந்திக்கும், காமராஜருக்கும் எப்படி ஒத்துப்போயிருக்கும்? காமராஜர் விரும்பிய சுதந்திரத்தை அளித்தவர் நேரு. ஆனால், இத்தகைய சுதந்திரம், இந்திராவிடமிருந்து காமராஜருக்கு கிடைத்திருக்குமா?
நாளை மீண்டும் படிக்கலாம்
 
– மதுரை மாயாண்டி