நெடுஞ்சாலை
கவிதை
பா. தேவிமயில் குமார்
நாள் தோறும்
நில்லாமல் பயணிக்கிறேன்
பயணச்சீட்டில்லை,
பணமுமில்லை, ஆனாலும்
பயணங்கள், உண்டு !
என்னைத் தாண்டிச் செல்பவர்க்கு
அஃறிணையைப் போல,
ஒரு காட்சிப் பொருள் நான்
என் இலக்கு என்ன ?
என் வீட்டின் இலக்கம் என்ன ?
எதுவும் நானறியேன்
அடுத்தவர்க்கு தான்
அதிகம் நான் வேலை
வைப்பதில்லை,
ஏனென்றால்
என் தேவைகள்
என்னவென்று
எனக்குத் தெரியாதே !
வாழ்ந்த வாழ்க்கை,
வந்த வழி,
இனி செல்லும் வழி,
என எதுவும் தெரியாதே !
கடும் வெயிலையும்
கடந்து செல்கிறேன் !
மையிருட்டிலும்
முடிவில்லாமல், பயணிக்கிறேன் !
அவசர ஊர்தி,
அமரர் ஊர்தி,
பேருந்துகள்,
புகைவண்டிகள்,
எது வந்தாலும், சென்றாலும்
எனக்குக் கவலையில்லை !
எங்கே செல்கிறேன் ?
எதற்காக போகிறேன் ?
யாரைப் பார்க்க வேண்டும் ?
யாருக்காக வாழ்கிறேன் ?
என்று தெரியவில்லையே ?
ஆனாலும் பயணிக்கிறேன்
அகலமாகி விட்டது
அழகிய சாலைகள் ! ஆனால்,
நிழலில்லாமல்
நான் தவிக்கிறேன்,
என்னைப் போலவே
பறவைகளும்
பதுங்க இடமில்லாமல்
பரிதவிக்குமோ ?
என் பயணங்களையும்,
என் பரிதவிப்பையும்,
என்றும் யாராலும்
உணரவே முடியாது !
நெடுஞ்சாலைகளின்
விபத்தும், ஆபத்தும்,
வேதனையும் என்
பயணங்களை
பாதிக்கவில்லை !
பயணம் செல்லும்
பாதசாரி நான்,
என் அனுபவங்கள்
அதிகம் !
ஆனால் நீங்கள்
என்மேல் ஏன்
அனுதாபப்படுகிறீர்கள் ?
“ச்சோ” என பரிதாபப்பட்டாலும்
“சர்” என பறக்கும் வாகனங்கள் !
ஒருவரும் எனக்காக
ஒருபோதும் நிறுத்தமாட்டார்கள்
பாதிவழியில் பயணத்தை !
நானும் பாதிவழியில்
நிறுத்த மாட்டேன் என் பயணத்தை
நடந்து கொண்டே இருப்பேன்
நெடுஞ்சாலையின் எல்லை வரை !
யார் தடுக்க முடியும் என்னை ?
எனக்குத் துணையானது
இந்த நெடுஞ்சாலை !
மௌனமாய் நாங்கள்
மனதார பேசிக்கொண்டே
மலைகளையும் காடுகளையும்
மலைப்பில்லாமல்
கடந்து செல்கிறோம் !
நீங்கள் ஏற்காவிட்டாலும்
நானும் ஒரு பயணிதான்,
நீண்ட நெடுஞ்சாலைதனிலே !
இப்படிக்கு,
நெடுஞ்சாலையில் அழுக்குமூட்டையுடனும்
பசியுடனும் பயணம் செய்யும்
மனநலம் பாதிக்கப்பட்ட
ஒரு மனிதன்.