ஈரோடு:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள நிலையில், அங்கு ரூ. 151 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

3 நாள் பயணமாக கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண் டுள்ள தமிழக முதல்வர் இன்று ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதோடு, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், பொதுப்பணித்துறை, வேளாண்மை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளின் சார்பில், 21.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 13 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
அதையடுத்து, பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், பள்ளிக் கல்வி, வருவாய் பேரிடர் மேலாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 76.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, 53.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு துறைகளின் சார்பில் 4 ஆயிரத்து 642 பயனாளிக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எடப்பாடி பழனிசாமி, கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆவணப்படத்தையும் வெளியிட்டார். மொத்தம் ரூ. 151 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, அனைத் துறை முதன்மை அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
Patrikai.com official YouTube Channel