திருப்பதி:
திருப்பதி கோவில் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், பல தேவஸ்தான ஊழியர்கள் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டு வருவதால், கோவிலை மூட தேவஸ்தான ஊழியர்கள், தேவஸ்தான நிர்வாகிகளிடம்  பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கோவில்களும் மூடப்பட்டன. தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், சில கோவில்களும் பாதுகாப்புடன் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சுமார்  80 நாட்கள் கொரோனா தடுப்பு காரணமாக  மூடப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவில்,  ஜூன் 11 அன்று மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தாலும், திருப்பதியில் வைரஸ் பரவுவது மிகவும் கடுமையாகி உள்ளது. இதனால் ஏராளமான ஊழியர்கள் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் ஒரே நாளில் 40க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தொற்று உறுதியானது. இதனால், தேவஸ்தான ஊழியர்கள் கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.
தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகின்றனர். நேற்று புதிதாக 14 அர்ச்சர்களுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
இதையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள்  தரிசனத்தை தற்காலிகமாக இடை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று மற்ற ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தேவஸ்தானத்தக்கு பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, இந்திய தொழிற்சங்கங்களின் மையத்துடன் இணைந்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) பணியாளர்கள் மற்றும் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகள் புதன்கிழமை TTD நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கலுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், அதன்படி,  கோயிலில் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் ஊரடங்கு செய்யப்பட்டபோது செய்ததைப் போல தனிப்பட்ட முறையில் சடங்குகளை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயில் புதன்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேவஸ்தான ஊழியர்கள் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால், கோவிலில் பக்தர்களுக்கு மீண்டும் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.