தூத்துக்குடி: காவலர் முத்துராஜை சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு இரவில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடா்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 பேர் மீதும் கொலை உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந் நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜை சிபிஐ அதிகாரிகள் நேற்றிரவு 10 மணியளவில் திடீரென சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் எப்படி தாக்கினர்? முன்விரோதம் ஏதும் இருந்ததா? என சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காவல் நிலையத்தின் மாடி அறை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றும் விசாரித்தனர். விசாரணை 1.30 மணி நேரம் நீடித்ததாக தெரிகிறது. பின்னர் காவலர் முத்துராஜை சிபிஐ அதிகாரிகள் மதுரைக்கு அழைத்து சென்றனர்.
Patrikai.com official YouTube Channel