டெஹ்ரான்
சாபகார் துறைமுக ரயில்வே திட்டத்தில் இருந்து இந்தியாவை நீக்குவதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஈரான் இடையே கடந்த சில மாதங்களாகப் பல பிரச்சினைகள் நிலவி வருகின்றன. ஈரான் நாட்டின் மீதான கோபம் காரணமாக அமெரிக்கா அந்நாட்டுடன் எண்ணெய் வர்த்தகம் செய்யக் கூடாது என உலகநாடுகளுக்குத் தடை விதித்தது. மீறி எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இதனால் இந்தியா ஈரானிடம் எண்ணெய் வாங்ககூடாதுஎ ந முடிவு செய்தது.
அதில் இருந்து இந்தியா மீது ஈரான் கோபத்தில் உள்ளது. ஈரான் நாட்டில் உள்ள முக்கிய துறைமுகமான சாபகார் துறைமுக ரயில்வே திட்டத்தை நடத்த இந்தியாவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ரயில்வே திட்டம் ஆப்கானிஸ்தான் வழியாக அமைய இருந்தது. இதையொட்டி இந்திய ரயில்வே, ஆப்கானிஸ்தான் ரயில்வே மற்றும் ஈரான் ரயில்வே ஆகிய மூன்றும் இணைந்து ஒப்பந்தம் செய்தன. இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையெழுத்து இட்டிருந்தார்.
இந்த திட்டத்துக்கு 1.6 பில்லியன் டாலர் செலவு செய்யப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பணிக்காக இந்தியாவில் இருந்து பொறியாளர்கள் ஈரானுக்கு அனுப்பப்பட்டனர். ஆயினும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியா தனது பணிகளைத் தொடங்கவில்லை.
இந்நிலையில் சாபகார் துறைமுக ரயில்வே திட்டத்தில் இருந்து இந்தியாவை நீக்குவதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்தியத் தரப்பில் இருந்து பணிகளைத் தொடங்காததால் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஈரான் தானே நிறைவேற்றிக் கொள்ளும் எனக் கூறி உள்ளது. இதற்கு இந்தியா பணிகளைத் தொடங்காததே காரணம் எனக் கூறப்பட்டாலும் சீனாவும் மறைமுக காரணம் எனக் சொல்லப்படுகிறது
சீனாவுடன் ஈரான் 25 வருடங்களுக்கு சாலைப்பணிகள், ரயில்வே பணிகள் மற்றும் துறைமுகப் பணிகளைச் செய்ய ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. ஈரானில் எண்ணெய் எடுக்கும் பணிக்கும் சீனா ஒப்பந்தம் இட்டுள்ளது. சீனா இந்த திட்டங்களில் பாகிஸ்தானை இணைக்க விரும்புவதாகவும் இதனால் ஈரான் இந்தியாவை நீக்கி விட்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.