மந்திரி பங்களாவைச் சுற்றி உள்ள வீடுகளில் காவிச்சாயம் பூசி அத்துமீறல்..

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் நந்த கோபால குப்தா என்ற அமைச்சர் பிரயாக்ராஜ் நகரில் வசித்து வருகிறார்.

அங்குள்ள பகதூர்கஞ்ச் என்ற இடத்தில் அவரது இல்லம் உள்ளது. அவரது இல்லத்தைச் சுற்றியுள்ள சில வீடுகளின் சுவர்களில் சிலர் காவிச்சாயம் அடித்துள்ளனர்.

காவி வண்ணம், பா.ஜ.க.வின் கொடியின் நிறமாகும்.

தனது வீட்டுச்சுவற்றில் காவிச்சாயம் பூசிய நபர்களிடம், அந்த வீட்டின் உரிமையாளரான கால்நடை டாக்டர் ஜீவன் சாந்த் என்பவர் ‘’ எனது அனுமதி இல்லாமல் எனது வீட்டில் ஏன் காவி வண்ணம் அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டுள்ளார்.

ஆனால் இதனைப் பொருட்படுத்தாத அந்த கும்பல் , ஜீவனைத் திட்டியுள்ளனர். தாக்கவும் முற்பட்டுள்ளனர்.

அமைச்சரின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரவி குப்தா என்பவர் வீட்டிலும் , 20 பேர் கொண்ட கும்பல்  காவிச்சாயம் அடித்துள்ளது..

இதனை அவர் தட்டிக்கேட்டபோது’ நாங்கள் அப்படித்தான் அடிப்போம். எங்களைத் தடுத்தால் கடும் விளைவுகள் ஏற்படும்’’ என்று அந்த கும்பல், ரவியை மிரட்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட இருவரும், இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் அமைச்சர் நந்த கோபாலிடம் இது பற்றிக் கேட்டபோது’’ வீடுகளை அழகு படுத்தும் நோக்கத்துடன் காவி சாயம் அடிக்கிறோம்’’’ என்று விநோத விளக்கம் அளித்தார்.

-பா.பாரதி.