பஸ், ஆட்டோ என மாறி மாறி பயணித்து கோயிலுக்கு வந்த துபே..

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிக்ரு கிராமத்தில் கடந்த 3 ஆம் தேதி எட்டு போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே, அடுத்த எட்டாவது நாளில் போலீஸ் என்கவுண்டரில் பலியானான்.
உஜ்ஜயினியில் உயிரோடு இருந்தபோது துபேயின் ’இறுதி பயணம்’ எப்படி இருந்தது என்பதை மத்தியபிரதேச போலீசார் கண்டறிந்துள்ளனர்.
அங்கும், இங்குமாக பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களின் பதிவுகளை ஆராய்ந்தும், ஓட்டல், லாட்ஜ் மானேஜர்கள்,  டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் என பல தரப்பட்ட ஆட்களிடம் நேரில் விசாரித்தும்-
மத்தியபிரதேச போலீசார் துப்பு துலக்கியபோது கிடைத்த தகவல்கள் இவை:
மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகா காளீஸ்வரர் கோயிலில் கைது செய்யப்படுவதற்கு முதல் நாள் இரவு  ரவுடி துபே, ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் என்ற இடத்தில் இருந்துள்ளான்.
அங்கிருந்து ராஜஸ்தான் மாநில அரசுக்குச் சொந்தமான பேருந்தில் ஏறி மத்தியப்பிரதேச மாநிலம் ஜாலவாருக்கு தன்னந்தனியாக வந்து சேர்ந்தான்.
அங்கிருந்து தனியார் பேருந்தில் ஏறி உஜ்ஜயினி பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, வியாழக்கிழமை அதிகாலை- 4 மணி.அங்கிருந்து ஆட்டோ பிடித்து மகாகாளி கோயிலுக்கு வந்து ‘’கோயில் நடை எப்போது திறக்கும்?’’ என்று விசாரித்துள்ளான்.
‘’ 7.30 மணிக்குத் திறக்கும்’’ என்று அங்குள்ளவர்கள் கூறியதால், பக்கத்தில் உள்ள காஷிபுரா ஆற்றுக்கு நடந்தே சென்று குளித்து விட்டு, மீண்டும் கோயிலுக்கு வந்தான்.
அப்போது மணி ஏழரை.
அவனுக்கும் அப்போது தான் ’ஏழரை’ ஆரம்பித்தது.
கோயிலுக்கு அருகே பூஜை சாமான்கள் விற்கும் சுரேஷ் என்பவர் கடையில், பூ, பழம் இத்யாதிகளை வாங்கினான்.
பத்திரிகை, டி.வி. என அனைத்து ஊடகங்களிலும் வெளியான துபேயின் புகைப்படம், பூக்கடைக்காரர் சுரேஷ் மனதில் அச்சடித்த மாதிரி பதிந்திருந்தது.
கோயில் காவலாளிகளிடம் ,சுரேஷ் விஷயத்தைச் சொல்ல-
பின்னர் இந்த தகவல் போலீஸ் காதுகளை எட்ட, ஓடோடி வந்த உஜ்ஜயினி காவலர்கள், கோயில் வளாகத்தில் அவனைக் கைது செய்துள்ளனர்.
இந்த தகவல்களை உஜ்ஜயினி காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் சிங், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
‘’ துபே, தனது கையில் மொபைல் போன் எதுவும் வைத்திருந்தானா? உள்ளூரில் அவனுக்கு யாரும் நண்பர்கள் உள்ளனரா:?’’ என்பன போன்ற கேள்விகளுக்கு, ’’விசாரணை நடக்கிறது’’ என ஒற்றை வரியில் பதில் சொல்லி முடித்தார், சிங்.
-பா.பாரதி.