
சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.
கடும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், இங்கிலாந்திற்கு பயணம் செய்து, தனிமைப்படுத்தல் விதிகளைப் பின்பற்றி, ரசிகர்கள் இல்லாமல் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் விண்டீஸ் அணி வீழ்த்தியிருப்பது அந்நாட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
தனது இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தம் 313 ரன்களையே சேர்க்க முடிந்த இங்கிலாந்து அணி, விண்டீஸ் அணிக்கு 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. கடைசி நாளில் 200 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய விண்டீஸ் அணிக்கு, துவக்க வீரர்கள் ஏமாற்றினர்.
ஆனால், நடுக்கள மற்றும் பின்கல வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பிளாக்வுட் 95 ரன்களும், ரோஸ்டன் சேஸ் 37 ரன்களும், ஷேன் டவ்ரிச் 20 ரன்களும் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக, இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீசிய விண்டீஸ் பந்துவீச்சாளர்களில், கேப்ரியல் 5 விக்கெட்டுகளும், சேஸ் மற்றும் ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.