ண்டிகர்

விருப்பு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வாக்களித்தபடி தொகை அளிக்காததால் மீண்டும் பணியில் சேர உத்தரவிட பி எஸ் என் எல் நிர்வாகத்துக்கு ஊழியர்கள் நோட்டிஸ் அனுப்பி உள்ளனர்.

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் மற்றும் அதன் சார்பு நிறுவனமான எம் டி என் எல்  ஆகியவை கடும் இழப்பைச் சந்தித்து வந்தன.   தற்போதுள்ள தனியார் நிறுவனங்களுக்கு இணையாகச் சேவை அளிக்க முடியாததால் பல வாடிக்கையாளர்கள் விலகி விட்டனர்.   இதனால் வருமானம் குறைந்ததால் ஊழியர்களின் ஊதியத்தையும் தாமதமாகத் தரும் நிலை பி எஸ் என் எல் நிறுவனங்களுக்கு ஏற்பட்டது.

இதையொட்டி கடந்த 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம் விருப்பு ஓய்வு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது   இதில் இணைய பி எஸ் என் எல் நிறுவனத்திலிருந்து 78659 பேரும் எம் டி என் எல் நிறுவனத்தில் இருந்து 14387 பேரும் ஒப்புதல் அளித்தனர்.   அவர்களுக்கு நிர்வாகம் விருப்ப ஓய்வு ஊக்கத்தொகையை இந்த வருடம் மார்ச் 31 ஆம் தேதிக்குள் 50% மற்றும் ஜூன் 30க்குள் 50% என வழங்கப்படும் என அறிவித்தது.

ஆனால் அறிவித்தபடி இந்தத் தொகை அளிக்கப்படவில்லை.   விருப்பு ஓய்வு ஊக்கத்தொகையில் மார்ச் 31க்குள் 31.3% மற்றும் ஜூன் 30க்குள் 22.5% மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.   இதற்கு நிர்வாகம் போதுமான நிதி இல்லாததே காரணம் எனத் தெரிவித்துள்ளது.   ஆனால் கடந்த அக்டோபர் மாதம் மத்திய அமைச்சரவை விருப்பு ஓய்வு திட்டத்துக்கான செலவு முழுவதும் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதால் அனைத்து தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர்கள் பஞ்சாப் அரியானா உயிர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.  அவர்கள் தங்களுக்கு நிர்வாகம் உறுதி அளித்த தொகை கிடைக்கும் என்பதால் விருப்ப ஓய்வுக்கு ஒப்புக் கொண்டதாகவும் ஆனால் வாக்குறுதி மீறப்பட்டதால் தங்களை மீண்டும் பணியில் சேர்க்குமாறும் வழக்கு மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.  இது குறித்து உயர்நீதிமன்றம் பி எஸ் என் எல் நிர்வாகத்துக்கு விளக்கம் கோரி நோட்டிஸ் அனுப்பி உள்ளது.