குள்ளு வாத்தியார்

பா.தேவிமயில் குமார்

 

“லட்சுமி, சாமான்களை ஏற்ற லாரி வந்து விட்டது, தேவையான சாமான்களை மட்டும் எடுத்துக்கொள், மற்றவற்றை செல்லும் வழியில்  உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் கொடுத்து விடலாம்,”

எனக் கூறினார் குள்ளு வாத்தியார்.
 
“ம், ம், சரிங்க”  என்றவாறு  சாமான்களை ஏற்றி விட்டு, வீட்டுச் சாவியை ஊரிமையாளரிடம் ஓப்படைத்து விட்டு,  பதிவு  செய்திருந்த  காரில்  முதியோர்  இல்லம் நோக்கிப் பயணம் செய்தனர் முதிய தம்பதியர்.
 
குள்ளு வாத்தியாரின் இயற்பெயர் ராமசாமி ஆவார்,  1960 களில் ஆசிரியர் பயிற்சி முடித்து கள்ளக்குறிச்சி  அருகிலுள்ள கல்வராயன் மலைப்பகுதியிலுள்ள ஓரு கிராமத்தில் வேலைக்கு சேர்ந்தார்.  அந்த ஊரானது போக்கு வரத்து வசதியில்லாத, எந்த நாகரீகமும் அதிகம் தெரியாத, மலைப்பகுதி மக்கள் வசித்த மிக, மிக, எளிமையான பின்னடைந்தப் பகுதி ஆகும்.
 
அந்த ஊருக்கு வந்தவர், தன் பிறந்த ஊரான திருச்சியை மறந்து விட்டார் என்றேக் கூறலாம், அந்தளவிற்கு அந்த ஊர் மக்களுடன் ஓன்றாகி விட்டார்.
 
கீழ் நிலை வகுப்பு மாணவர்க்கு பாடம் சொல்லித்தருவது, தலை வாரி விடுவது, இயற்கை உபாதை வந்தால் சுத்தம் செய்யக் கற்றுக் கொடுப்பது, உடல் நலம் சரியில்லாத மாணவர்களுக்கும், மக்களுக்கும்,   மருந்து,   மாத்திரைகள்   வாங்கி   வந்துத்   தருவது,   அனைத்து  வீட்டின் விழாக்களிலும் கலந்து கொள்வது என அவர்களுள் ஓருவராகவே மாறி விட்டார்.  அவர் பெயரில்லாமல் எந்தப் பத்திரிக்கையும் அச்சாகாது என்ற அளவிற்கு அவர் ஓவ்வொரு குடும்பத்திலும் ஓன்றி விட்டார். அந்த கிராமத்தின் ஆசிரியர், செவிலியர், வழிகாட்டி என அவர்களுக்கு பல வகையில் உதவினார்.
 
திருமணம் ஆகி லட்சுமி அம்மாள் அங்கு செல்லும் வரை அவர் அந்த சிறியப் பள்ளியில் ஓரு அறையிலேயேத் தங்கி தன் பணியை செய்து வந்தார். பின் பள்ளி அருகில் உள்ள ஓரு ஓட்டு வீட்டில் மிக எளிமையான ஓரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர், இவர்களுக்குக் குழந்தைப் பேறு இல்லை என்பதையே, மாணவச் செல்வங்களின் அன்பில் நனைந்ததால் மறந்துவிட்டனர்.

அந்த மலை கிராம மக்கள் கடுக்காய் சேகரிப்பது, தேன் எடுப்பது, மற்றும்  தினை, சாமை, கிழங்கு, மா, பலா, போன்றவற்றைப் பயிர் செய்தனர், அவர்கள் வேலைக்கு நிம்மதியாக சென்றனர், ஏனென்றால் குள்ளு வாத்தியார் பசங்களைப் பாத்துக்குவார்” என்று பேசிக் கொள்வார்கள், ராமசாமி வாத்தியார் சராசரி ஊயரத்தை விட சற்றுக் குள்ளமாக இருப்பதால் அவரை மாணவர்களும், கிராமத்தவரும் அன்பாக குள்ளு வாத்தியார் என அழைத்தனர்.
 
ஜந்தாம் வகுப்பு வரை இருந்தப் பள்ளியை தன் முயற்சியால் எட்டாம் வகுப்பு வரைக் கொண்டு வந்தார். எட்டாம் வகுப்பிற்கு மேல் பெற்றோரை எதிர் பார்க்காமல், நகரத்தில் உள்ள பள்ளிகளில் ஓன்பதாம் வகுப்பு சேர்த்து விடுவார். விடுதியிலும், பள்ளியிலும் இவரேக் காப்பாளர் என கையெழுத்திட்டு விடுவார். கண்ணும் கருத்துமாக அவர்களுக்குத்  தேவையான அனைத்து உதவிகளையும் செய்வார்.
 
பின் கல்லூரி, அரசு  வேலை என விசாரித்து அவர்களுக்குக் கரம்  கொடுத்து நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விடுவார். அங்கு சுற்றியிருக்கும் கிராமங்களை விட படித்தவர், அரசுப்  பணியில் அதிகம்  பேர்  இந்த கிராமத்தில்  இருக்கின்றனர் என்றால்  அதற்குக் காரணம் குள்ளு வாத்தியார் என அக்கம் பக்கத்து கிராமத்தவர் ஏக்கத்துடன் கூறவதுண்டு. தன் வீட்டிற்குச் சிறு தொகையை மட்டும் வைத்துக் கொண்டு, மீதி சம்பாத்தியத்தை   பள்ளி மாணவர்க்கே செலவிடுவார். ஓய்வு பெறும் போது வந்தப் பணத்தில் பள்ளிக்கு மிக அருகில் ஜந்து ஏக்கர் இடம் வாங்கி அதனைப் பள்ளியின் பெயரில் எழுதி வைத்து விட்டார். அந்த  ஊர்  மக்கள்  எவ்வளவோ  சொல்லியும், ஓய்வு  பெற்ற  பின்  தன்னுடைய ஊரானத் திருச்சிக்கு சென்று விட்டார். அங்கு வாடகை வீட்டில் தங்கினார்.
 
அதன் பின் ஓரு பத்து ஆண்டுகள், அந்த கிராம மக்கள் வந்து போய்க் கொண்டு இருந்தார்கள், ஆனால் கடந்த பத்து வருடங்களாக  யாருடைய தொடர்பும் இல்லை.
 
இப்போது அவருக்கு வயதாகி விட்டதால் கையில் வைத்திருந்த பணத்தை வைத்து சென்னையில் ஓரு முதியோர் இல்லத்தில் பத்து நாட்களுக்கு முன் சேர்ந்து விட்டனர். இப்போது சாமான்களை எடுத்துச் செல்லவும், வீட்டை காலி செய்யவும் வந்தனர்.
 

“லட்சுமி, உனக்கென்று நான் எதையும் செய்யவில்லை, எனக்குப் பிறகு உனக்கு யாரும் இல்லை, எனவே நம் கடைசி  கால வாழ்க்கை பாதுகாப்பாக இருப்பதற்காக தான் இந்த முடிவை எடுத்தேன், பரவாயில்லையா? லட்சுமி” என்றார்.

 

“நீங்கள் இதுவரை தர்மப்படி தான் எல்லாவற்றையும் செய்திருக்கிங்க, இதுவும் சரிதான்” என்று லட்சுமி அம்மாள் கூறினார்.

 

“சரி இல்லம் வந்து விட்டது” என்றுக் கூறி இறங்கினர்,

 
இறங்கியது  தான்  தாமதம் பத்து பேர் இவர்கள்  காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள், யாரென்றுப் பார்த்தால் மலை கிராம முன்னாள்  மாணவர்கள்.
 

“எழுந்திருங்கப்பா, என்ன இங்கே?” என்றார் குள்ளு வர்த்தியார்.

 

“சார், இந்த விடுதியை நடத்துவது என் மருமகன் தான், என் சட்டைப் பாக்கொட்டில் உங்கள் போட்டோவை நான் வைத்திருப்பதைப் பார்த்துள்ளார்,  எனவே உங்களை பத்து நாட்களுக்கு முன் அடையாளம் கண்டு என்னிடம், கூறினார், நான் இதனை ஊர் மக்களிடம் கூறியவுடன், உங்களை அழைத்து வர அனைவரும் கூறி விட்டார்கள், வாருங்கள் போகலாம்” என்றார் அவருடைய முன்னாள் மாணவர் ஒருவர்.

 

“இல்லையப்பா, உங்களுக்கு எதற்கு சிரமம், நாங்கள் இங்கேயே இருந்து விடுகிறோம்” என்றனர் தம்பதியர்.

 

“இல்லை அய்யா, பள்ளிக்கு சிறிய இடம் தான் இருக்கிறது என்று, உங்கள் பணத்தில் பெரிய இடம் வாங்கித் தந்த பெரிய மனிதர் நீங்கள், உங்களை நாங்கள் தான் கடைசி காலத்தில் பார்த்துக் கொள்வோம்” என்றனர்.

 

“நீங்கள் சிறு வயதில் அன்பாகப் கூறியது கேட்டு நாங்கள் வளர்ந்தோம், இப்போது நாங்கள் அன்பாகக் கூறுவதை நீங்கள் கேட்க வேண்டும், இது உங்கள் மாணவர்களின் அன்புக்  கட்டளை”   எனக் கண்ணீர்  விட்டனர்.

 
பின் மறுக்க முடியாமல் அவர்களுடன் பயணம் செய்தனர், ஊர் எல்லையை அடைந்ததும் குள்ளு வாத்தியாரையும், லட்சுமி அம்மாளையும் ஊரே திரண்டு மாலையிட்டு வரவேற்றனர். மேளதாளங்கள் முழங்க வாத்தியாரை அவரின் மாணவர்கள் தோளில் தூக்கிக்  கொண்டு  சென்றனர்.

ஓரு  புதிய  வீட்டில்  குள்ளு  வாத்தியார்  லட்சுமி  அம்மாள்   இல்லம்” என்று சலவைக்கல்  பதிக்கப்  பட்ட  இல்லத்தில் அவரை  சென்று  அமர  வைத்தனர்.
 

“என்னப்பா இதெல்லாம்?” என்றார்.

 

“அய்யா, புதிதாகக் கட்டிய வீட்டினை சென்ற வாரம் ஊர் மக்கள் சேர்ந்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி  விட்டோம்,”  என்றபோது லட்சுமி அம்மையாருக்கு கண்ணில் நீர் தளும்பி நின்றது.

 
அவருடையப் பழைய மாணவி காபி, இட்லி, சாம்பார் எடுத்து வந்து இருவரையும் சாப்பிட வைத்தாள்,
 

“சார் நீங்கள் இருவரும் எங்கள் கிராமத்தின் சாமிகள், நாங்கள் வந்து உங்களுக்கு சேவை செய்கிறோம், நீங்கள் இந்த ஊரில் இருந்தால் மட்டும் போதும்” என்றார்.

 
அந்த ஊர்த்தலைவரான இவருடைய  மாணவர்,
 

“ஐயா நீங்கள் எப்போதும் போல எங்கள் முன்னேற்றத்திற்கு ஆலோசனை வழங்குங்கள் அது போதும்” என்றார்.

 
பின் அந்த வீட்டு வாசலில் நின்று குள்ளு வாத்தியார், பள்ளிக் கூடத்தைப் பார்த்தார், இவர் வாங்கிப்போட்ட நிலத்தில் மேல் நிலைப் பள்ளி கமபீரமாக நின்றது.
 

“லட்சுமி, இங்க வா என்றார், என்ன நினைக்கிறாய் இன்றைய நிகழ்ச்சி பற்றி” என்றார்,

 
அப்போது அந்தப் பள்ளியில் மாணவர்கள்.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு”

பொருள்  :
குறள் ஆதிகாரம் 11:07
 
தமக்குத் துன்பம் வந்தபோது உதவி செய்தவரது நட்பை, அடுத்த ஏழு பிறப்புக்கும் நல்லவர்கள் மறக்க மாட்டார்கள் என்ற குறளை சத்தமாகப் படித்தனர்,
 

“ஆமாங்க இவர்கள் ஏழை, எளிய நிலையில் இருந்தபோது எதனையும் எதிர் பார்க்காமல் உங்கள் கடமையைச் செய்தீர்கள், அதற்குரிய பலன் தான் இன்று உங்களுக்கு நடந்த அன்பின் அபிஷேகம்” என்றார்.

 

“ஆமாம் லட்சுமி நான் என் கடமையைதான் செய்தேன், அதையும் உள்ளூர என் குழந்தைகளாக நினைத்து செய்தேன், இப்போது என்னை அவர்கள் குழந்தையைப் போல அன்பாகப் பார்க்கின்றனர். இன்று எனக்கு வாரிசு இல்லையே என்ற ஏக்கம் சிறிது கூட இல்லை இந்தப் பள்ளிக் கூடத்தையும், ஊர் மக்களையும் பார்த்தது எனக்கு மறு பிறவி போல உள்ளது” என்றார்.

 

“ஆமாங்க, நானும் அப்படிதான் உணர்கிறேன்” என்றார் லட்சுமி அம்மாள்.

– பா.தேவிமயில் குமார்