லக்னோ
உத்தரப்பிரதேச ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியின் பிரபல ரவுடியான விகாஸ் துபே வை கைது செய்ய காவல்துறையினர் அவன் வீட்டை முற்றுகை இட்டனர் அவன் தனது கூட்டாளிகளுடன் இணைந்து நடத்திய துப்பாகி சூட்டில்8 காவல்துறையினர் உயிர் இழந்தனர். ரவுடி விகாஸ் துபே தலைமறைவாகி விட்டான். அவனை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மபி உஜ்ஜைனி நகரில் மாகாளி கோவிலில் விகாஸ் துபே கைது செய்யப்பட்டான். அவனை உத்தரப்பிரதேச காவல்துறையினர் கான்பூருக்குப் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். கான்பூர் அருகே அவர்கள் வந்த வாகனம் கவிழ்ந்தது. அப்போது ரவுடி விகாஸ் துபே தப்பி ஓட முயன்றதாகவும் அதை அடுத்து அவன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சம்பவம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “இந்த என்கவுண்டர் சம்பவம் திட்டமிடப்பட்ட நிகழ்வாகும். விகாஸ் துபேவை அழைத்துச் சென்ற கார் தானாக கவிழவில்லை, அது கவிழ்க்கப்பட்டுள்ளது. தனது ரகசியத்தைக் காக்க இந்த சம்பவத்தை உபி அரசு நடத்தி உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங், “ரவுடி விகாஸ் துபே பதுங்குவதற்கு ஏன் உஜ்ஜைனி மகாகாளி கோவிலைத் தேர்வு செய்ய வேண்டும்? விகாஸ் துபே பதுங்க ,மத்தியப் பிரதேசத்தில் யார் உதவி செய்தனர்?” என சரமாரியாகக் கேள்விகள் கேட்டுள்ளார்.