சென்னை:
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், மீண்டும் மீண்டும் தங்களது சிறப்பு பிரிவு பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் தேவையின்றி வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டதும், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக தமிழக காவல்துறையில் உள்ள போக்குவரத்து, சிபிசிஐடி, மத்திய குற்றப்பிரிவு, மது விலக்கு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் காவலர்கள் கொரோனா கட்டுப்படுத்தும் பணி, விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுத்த பணிக்கப்பட்டிருந்தனர்.
தற்போது கொரோனா தடுப்பு பணிகள் பல்வேறு தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் கொரோனா கட்டுப்படுத்தும் பணியில் செயல்படும் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீண்டும் அவர்களது சிறப்பு பிரிவு பணிக்கு செல்லுமாறு தமிழக டிஜிபி உத்தரவிட்டு உள்ளார்.
கொரோனா பணியில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர் உடனே அந்தந்த மாவட்டத்தில் உள்ள சிறப்பு பிரிவு தலைமை இடத்தில் உடனடியாக தகவல் தெரிவித்து அவர்களது வழக்கமான பணியில் சேர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.