கிழிந்த தேசியக் கொடி.. பதறிய மக்கள், பதறாத அதிகாரிகள்..

மதுரை ரயில் நிலைய கிழக்கு நுழைவாயிலில், கடந்த குடியரசு தினத்தில், ஒன்பதரை லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 100 அடி உயரக் கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. அதில், 20 அடி நீள பாலிஸ்டர் துணியால் செய்யப்பட்ட தேசியக் கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.  இந்நிலையில், நேற்று காற்றின் வேகத்தில் தேசியக் கொடி கிழிந்தது. நேற்று இரவு முதல் இன்று மதியம் வரை கிழிந்த நிலையிலேயே தேசியக் கொடிக் கம்பத்தில் பறந்தது.

“பெரிய அளவிலான தேசியக் கொடி பறப்பதைப் பார்க்கவே நன்றாக இருக்கும். காற்றில் அது ஆடுவதைப் பலரும் நின்று ரசிப்பார்கள். நேற்று மாலை பலத்த காற்று வீசியது. அதில் தேசியக் கொடி சேதமடைந்திருக்கிறது” என்று தெரிவிக்கின்றனர் அப்பகுதியினர்.

ஆனால் தேசியக்கொடி கிழிந்த நிலையில் பறப்பதை நிலைய ஊழியர்களோ, அதிகாரிகளோ யாரும் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது.  இதன் பின்னர் பொது மக்களில் சிலர் ரயில் நிலைய அதிகாரிகளிடம் கொடி கிழிந்தது பற்றித் தெரிவித்துள்ளனர்.  எனினும் உடனே கொடியை அதிகாரிகள் கழற்றவில்லை. மதியத்திற்கு மேலே தான் கொடியைக் கழற்றியுள்ளனர்.

“இரவு நேரம் என்பதால் கொடியைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை என வைத்துக்கொண்டாலும், காலையில் கொடியைக் கவனித்துக் கழற்றியிருக்கலாம். மதியம் வரை, தேசியக் கொடி கிழிந்த நிலையில் பறந்தது மனதை லேசாகக் காயப்படுத்துவது போல இருந்தது” என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் பொது மக்கள்.

– லெட்சுமி பிரியா