சென்னை

ன்று தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பட்டினி போராட்டம்  நடத்துகின்றனர்.

கொரோனா தாக்குதலால் கடந்த மார்ச் மாதம் முதல்  அனைத்துப்  பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. கொரோனா தாக்குதல் கட்டுக்குள் வராததால் பள்ளிகள் உடனடியாக திறக்க வாய்ப்பில்லாமல் உள்ளது.   இவ்வாறு மூடப்பட்டுள்ள அரசு மற்றும் அரசு நிதியில் நடைபெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்குத் தமிழக அரசு ஊதியம்  வழங்கி வருகிறது.

தமிழகத்தில் தனியார் நடத்தும் நர்சரி, பிரைமரி,  மெட்ரிகுலேஷன், மேல்நிலைப் பள்ளிகள் என 12 ஆயிரம் பள்ளிகள் உள்ளன.    இவை அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளதால் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.  ஆகவே இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை

தனியார் பள்ளி ஆசிரியர்கள் இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் கேட்டு வருகின்றனர்.  தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அவரவர் வீட்டு முன்பு அமர்ந்து பட்டினி போராட்டம் நடத்தப் போவதாக தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன்,  மேல்நிலை பள்ளிகள் சங்கம் அறிவித்திருந்தது.

அதையொட்டி இன்று காலை முதல் மாலை வரை இந்த பட்டினி போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் சுமார் 5 லட்சம்  ஊழியர்கள், மற்றும் 5 லட்சம் பணியாளர்கள் கலந்துக் கொண்டு தங்கள் வீடுகளுக்கு முன்பு அமர்ந்து பட்டினி போராட்டம் நடத்துகின்றனர்.