சென்னை:
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவியிடம், தனது சம்பளத்தை கூறி, காதல் வலை வீசிய மாநகராட்சி உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் கொரோனாதொற்று பரவல் தீவிரமடைந்ததால், தடுப்பு பணியில் மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மட்டுமின்றி, ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் தன்னார்வலர்களாக ரூ.15ஆயிரம் ஊதியத்தல் பணியமர்த்தப்பட்டனர்.
இவர்களை மண்டலங்கள் வாரியாக பணியமர்த்தப்பட்டு, அந்த பகுதிகளில் உள்ள வீடு வீடாக கொரோனா பாதிப்பு குறித்து, தகவல்சேகரிக்க பணிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி என்ஜினீயர் ஒருவர் தன்னோடு கொரோனா பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவி ஒருவருக்கு காதல் வலை வீசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நீ அழகாக இருக்கிறாய். உன்னை எனக்குப் பிடிக்கும். 2 ஆண்டுகளுக்கு முன்பு என்னைப் பார்த்திருந்தால் நீ தான் மிஸஸ் கமல் என்று உருகி உருகி தன் காதலை வெளிப் படுத்தியுள்ளார். மேலும் தனது சம்பளம் இவ்வளவு என்று கூறி அவருக்கு ஆசையை தூண்டியதும் தெரியவந்தது. இந்த ஆடியோ சமூக வலைதளங் களில் வைரலானது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் முறையிட்டுள்ளார். அவர், இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிறப்பித்துள்ளார்.
மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.