மக்களின் குரல்வளையை நெரித்தபின் அவர்களின் மவுனத்தை உங்களுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமாக கருதாதீர்கள் மத்திய மாநில அரசுகளை சாடும் பீட்டர் அல்போன்ஸ்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான பீட்டர் அல்போன்ஸ் தனது முகநூல் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கை தூக்கி காப்பாற்ற வேண்டிய மத்திய, மாநில அரசுகள் என்ன செய்வது, எப்படி செய்வது, எப்போது செய்வது என்று எதுவும் புரியாமல் ஏதாவது செய்து தொலைக்கவேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தில் எதையாவது செய்து வைப்பதால் இந்த மக்களின் எந்த பிரச்சினையும் தீரவில்லை” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
“என்று விழிக்கும் அந்த குடிமைச்சமூகத்தின் மனசாட்சி?”
சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மாற்றியமைக்கப்பட்ட நிபந்தனைகளோடு ஊரடங்கு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள், வீட்டிலிருந்தாலும் சம்பளம் வாங்குபவர்கள், கைநிறைய சேமிப்பு வைத்திருப்பவர்கள், வேலை செய்யாமலே வாழ்க்கை நடத்தக்கூடிய செல்வந்தர்கள் ஆகியோரை இந்த ஊரடங்கு எவ்வித்த்திலும் பாதிக்கவில்லை.இவர்களில் பலருக்கு ஊரடங்கு குடும்பத்தோடு உண்டு,உறங்கி மகிழ்ச்சியாக இருந்த அனுபவமாக மாறிப்போனது.
மற்றொரு தரப்பினருக்கு ஊரடங்கு -பசியோடும், பட்டினியோடும் பரிதவிப்போடும் கண்ணீருக்கிடையில் கழிந்தது. பசியும், பட்டினியும், குடும்பத்தினரின் நிற்கதியும் அவர்களை வீட்டுக்குள் இருக்கவிடவில்லை. நோய் பற்றிய பயமும், காவல்துறையும், அரசும் அவர்களை வெளியே வர அனுமதிக்கவில்லை.
அடைக்கப்பட்ட தொழிற்சாலைகள், முடங்கிப்போன வியாபார நிறுவனங்கள், நிறுத்தப்பட்ட போக்குவரத்து, வற்றிப்போன வேலைவாய்ப்புகள், யாருக்கும் யாரும் உதவமுடியாத நிலை என்ற பலமுனை நெருக்கடிகளின் காரணமாக அவர்கள் பெரும் துயரத்திற்கும், வேதனைக்கும் ஆளாகியிருக்கிறார்கள். கை தூக்கி காப்பாற்ற வேண்டிய மத்திய, மாநில அரசுகள் என்ன செய்வது, எப்படி செய்வது, எப்போது செய்வது என்று எதுவும் புரியாமல் ஏதாவது செய்து தொலைக்கவேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தில் எதையாவது செய்து வைப்பதால் இந்த மக்களின் எந்த பிரச்சினையும் தீரவில்லை.
உலக சுகாதாரமையமும், இந்திய மருத்துவ கவுன்ஸிலும், பன்னாட்டு மருந்து தயாரிப்பு கம்பெனிகளும் தடுப்பு ஊசி அடுத்த ஆண்டு தான் சந்தைக்கு வரும் என்று அறிவித்துள்ள நிலையில் எதிர்காலத்தைப் பற்றி விடை தெரியாத பல கேள்விகளோடு உலகமே கதிகலங்கி நிற்கிறது. இத்துயரும், துன்பமும் சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் முடிந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதையெல்லாம் விற்று உயிர்பிழைத்த மக்கள் இப்போது விற்பதற்கும் ஏதும் இல்லாது விழிபிதுங்கி நிற்கின்றனர். பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் துறை தலைவராக பணியாற்றிய பேராசிரியர் முறுக்கு பிழிந்து வியாபாரம் பார்க்கிறார். அருகில் எம்பிஏ படித்த அவரது மனைவி மாவு பிசைந்து கொடுக்கிறார். பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் குளங்களுக்கு மண்வெட்ட போகிறார்கள்.
உலக வரலாற்றை புரட்டி பார்த்தால் இதைப்போன்ற பல நெருக்கடிகளை மனித சமூகம் சந்தித்து, அவைகளைப் போராடி வென்றுதான் இன்று மனிதன் இவ்வளவு முன்னேறியுள்ளான் என்று அறியும்போது இந்த தொற்றையும் எதிர்கொண்டு வெல்லமுடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
இரண்டு உலக யுத்தங்கள், கருப்பு சாவு என்றழைக்கப்பட்ட கொடுமையான பிளேக் நோய், கொத்துகொத்தாக மக்கள் செத்து மடிந்த காலரா,தட்டம்மை, ஸ்பானிஷ் புளு காய்ச்சல் போன்ற பெரும் அபாயங்களையும், அவலங்களையும் எதிர்கொண்ட மனிதன் ,அதிலிருந்து மீண்டு எழுந்து வந்துள்ளான். அன்று அவனுக்கு இருந்த வாய்ப்பு, வசதிகளைவிட நாம் இன்று பல மடங்கு அதிகம் பெற்றுள்ளோம். இன்று நம்மிடம் இருக்கின்ற விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சியில் நூற்றில் ஒரு பங்கு கூட அன்று அவர்களிடம் இல்லை.
அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை நாம் தெரிந்து கொண்டு , அவர்கள் பின்பற்றிய வழிகளைப் பின்பற்றினால் கொரொனாவை எதிர்த்து , இந்த யுத்தத்திலும் நாம் வெற்றி கொள்ள முடியும். அவர்கள் வெற்றி பெற நான்கு மக்கிய காரணங்கள்
- அவர்களிடம் இருந்த தன்னம்பிக்கை
- அதனை செயல்படுத்த அவர்கள் தந்த கடுமையான உழைப்பு
- அவர்கள் மத்தியில் இருந்த ஒற்றுமை-ஒத்துழைப்பு
- அவர்களுக்குக் கிடைத்த தன்னலமற்ற, தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள்.அந்தத் தலைவர்கள் காட்டிய வழியில், அவர்கள் ஊட்டிய தன்னம்பிக்கையில் அன்றைக்கு வாழ்ந்த நம் முன்னோர்கள் ஒற்றுமையாக ஒத்துழைத்து கடுமையாக உழைத்ததின் காரணமாகத்தான் அன்று அவர்களால் வெற்றி பெற முடிந்தது.
இன்றைக்கு நமக்கு வாய்த்த தலைவர்களிடம் நாம் வைக்கும் வேண்டுகோள்-அவர்களை காந்தியாக, நேருவாக, வின்ஸ்டன் சர்ச்சிலாக, நெல்சன் மாண்டெலாவாக, காமராசராக இருந்து உடல், உயிர், உடமைகள் அனைத்தையும் நமக்குத் தந்து நம்மை வழிநடத்துங்கள் என்று கேட்கவில்லை. குறைந்த பட்ச மனித நேயத்தோடு, அடிப்படையான புரிதல்களோடு, நாங்கள் தருகிற வரிப்பணத்தை சற்று நாணயத்தோடு, சேதாரம் இல்லாமல் செலவு செய்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்றுதான் கேட்கிறோம். நீங்கள் எடுக்கிற முடிவுகள் பொதுநலனுக்கானதாகவும், உள்நோக்கமின்றியும், அடிப்படை பொது அறிவுக்கு உட்பட்டதாகவும், நடைமுறைக்குச் சாத்தியமானதாகவும், ஏழை மக்களின் வாழ்வை மேலும் சிக்கலாமாக்கமலும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அரசாங்க கொள்முதல், அரசுப்பணிகளின் ஒப்பந்தங்களை இறுதி செய்தல், இவற்றை நீங்கள் நினைத்தபடி நடத்தித்தற உங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை நியமித்துக் கொள்ளுதல் போன்ற “அத்தியாவசியப் பணிகளைத் “ தவிர மற்ற கொள்கை முடிவுகளையெல்லாம் நீதிமன்றங்களே எடுத்துக்கொள்ளட்டும் என்று நீங்கள் ஒதுங்கிக்கொள்வது உங்களது கலப்படமற்ற சுயநலத்தைக் காட்டுவதாக நாங்கள் கருதுகிறோம்.
எங்கள் நிகழ்காலத்தை மட்டுமல்ல, எங்களது சந்ததிகளின் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளைக்கூட நீங்கள் புரிந்துகொள்ள மறுப்பதும், அவற்றை உதாசீனப்படுத்துவதும் எங்கள் நெஞ்சத்தைப் பதறவைக்கின்றன. ”பசிக்கிறது, வலிக்கிறது” என்று சொல்லி அழுவதைக்கூட தேசவிரோதச் செயல் என்று நீங்கள் அறிவித்துவிட்ட பின்பு எங்களில் அநேகருக்கு அழக்கூட பயமாக இருக்கிறது. இயலாமையும், அச்சமும் எங்கள் குரல்வளையை நெறித்துவிட்ட பிறகு எங்களது மவுனத்தை நாங்கள் உங்களுக்குத் தந்த அங்கீகாரமாக நீங்கள் விளம்பரப்படுத்துவது இந்திய வரலாற்றின் மிகப்பெரும் சோகம்.
ஜனநாயகத்தில் ஏற்படக்கூடிய அத்துமீறல்களையும், விபரீதங்களையும், விபத்துக்களையும் தடுக்கவும், சரிசெய்யவும் அரசியல் சாசனச் சட்டம் உருவாக்கின நிறுவனங்களும் ஒவ்வொன்றாக செயலிழந்து போவது எவ்வளவு பெரிய கொடுமை!
கொரோனா நோய் தொற்றால் தளர்ந்துபோய் நிற்கின்ற தனிமனிதர்களை, குடும்பங்களை, சமூகத்தை, அரசியல் அமைப்பை, நிறுவனங்களை தூக்கிநிறுத்தி செயல்பட வைக்க ஜாதி, மதம், மொழி, மாநிலம் ஆகிய எல்லைகளைக் கடந்த ஒட்டுமொத்த குடிமைச்சமூகத்தால் (civil society at large) மட்டுமே முடியும். “என்று விழிக்கும் அந்த குடிமைச்சமூகத்தின் மனசாட்சி?”
இவ்வாறு தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .