‘’லாக் டவுன் பார்ட்டி’’யில் பா.ஜ.க. எம்.எல்.ஏ… நொந்து நூலான முதல்வர்
நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற நோக்கமா? அல்லது பெயர் கெட்டு விடக்கூடாது என்ற அச்சமா? என்பது தெரியவில்லை என்றாலும், இங்கே அனைத்து மாநில முதல் –அமைச்சர்களும் கொரோனா தடுப்பில் , போராளிகளாக உருமாறி களத்தில் குதித்துள்ளார்கள் என்பதை மறுக்க இயலாது.
அவர்களில் ஒருவர், கோவா மாநில பா.ஜ.க.. முதல்-அமைச்சர் பிரமோத் சாவந்த்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ரத்தக்கண்ணீர் வடிக்காத குறையாக, தனி நபர் இடைவெளியை வலியுறுத்தி, ஓர் உருக்கமான அறிக்கை வெளியிட்டிருந்தார்.
‘’ நாம் நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறோம்.இந்த வேளையில் நமக்குப் பிறந்த நாள் விழாக்களில் கலந்து கொள்ள அழைப்பு வரும். வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வற்புறுத்தல் வரும். ஆனால் போகக்கூடாது. பக்கத்து வீட்டில் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவருக்கு உடல் நலம் சரி இல்லையென்றாலும் விசாரிக்கச் செல்ல வேண்டாம்.
இந்த சமயத்தில் விருந்து நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம்.உங்கள் வீட்டுக்கு யாரையும் அழைக்க வேண்டாம். கொரோனா அறிகுறி இல்லாதவர்களால் கூட வைரஸ் பரவும் என்பது உங்களுக்குத் தெரியாது?’’ என்று காலில் விழாத குறையாக கோவா மக்களை முதல்வர் சாவந்த் கெஞ்சி இருந்தார்.
அவர் அறிக்கை எழுதிய பேனாவின் மை காயும் முன்பாக கோவாவில் உள்ள கடற்கரை விடுதியில், ஊரடங்கு விதிகளைக் காற்றில் வீசி எறிந்து விட்டு, ஒரு கோலாகல விருந்து நடக்கிறது.
இந்திப் பாடல்களுக்கு அங்கே திரண்டிருந்த நாற்பது, ஐம்பது பேர் ஆட்டம் போடுகிறார்கள்.
‘’இந்த பார்ட்டி ஸ்பெஷல் பார்ட்டி.. ஸ்பெஷெல் விருந்தினர்.. லாக்டவுன் பார்ட்டி’’ என்று ஒருவர் சத்தமாக கூச்சல் போட-
விருந்து கூடத்துக்குள் போனும், கையுமாக நுழைகிறார், வி.ஐ.பி. ஒருவர்.
அவர் வேறு யாரும் அல்ல.
கோவா மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. கிளென் சவுசா டிக்ளோ.
விருந்தினர்களுக்கு கை கொடுக்கிறார்.
போன் பேசுகிறார்.
அங்கும்,இங்கும் உலவுகிறார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, கோவா மாநிலத்தை அதிற வைத்துள்ளது.
’’என்ன கூத்து இது?’’ எனச் செய்தியாளர்கள் முதல்வரிடம் ’’துக்கம்’’விசாரிக்க, ’அப்செட்’’ ஆன முதல்வர் சாவந்த்’’ விசாரிக்கிறேன்’’ என்ற ஒரு வரி பதிலோடு முடித்துக்கொண்டார்.
’’தனது வேண்டுகோளை .சொந்த கட்சிக்காரரே புறக்கணித்து சமூக இடைவெளியை உதாசீனப்படுத்தும் போது, மற்றவர்களை எப்படி கேள்வி கேட்க முடியும்?’’ என்பது முதல்வரின் ஆதங்கம்.
பதறிப்போன எம்.எல்.ஏ.வோ’’ எனது நெருங்கிய நண்பர் ஒருவர் அந்த விருந்துக்குக் கூப்பிட்டார். தவிர்க்க இயலவில்லை. போனேன். உடனடியாக அங்கிருந்து கிளம்பி விட்டேன்’’ என்கிறார்.
‘’ இந்த விருந்து அனுமதி பெற்று நடத்தப்பட்ட விருந்து. இதில் தப்பில்லை’’ என்று, வக்காலத்து வாங்குகிறார், ஒருவர்.
அவர் , வேறு யாருமல்ல.
விருந்தில் பங்கேற்றுக் குதூகலித்த, ,பா.ஜ.க.கவுன்சிலர், பிரான்சிஸ்..
-பா.பாரதி.