குவைத் :
குவைத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வரைவு மசோதா வளைகுடா நாட்டின் தேசிய சட்டமன்றத்தின் சட்ட மற்றும் சட்டமன்றக் குழுவால் அரசியலமைப்புச் சட்டமாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மசோதாவை மற்றொரு குழு ஆராய வேண்டியுள்ள நிலையில், குவைத் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் குறைப்பதற்கான ஒரு விரிவான திட்டத்தை இந்த மசோதாவில் குறித்துள்ளதால், 7-8 லட்சம் இந்தியர்கள் குவைத்திலிருந்து வெளியேற்றப்படக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்த மசோதா விரைவில் சட்டமாக இயற்றப்பட உள்ளது.
48 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட குவைத்தின் மொத்த மக்கள் தொகையில் இந்தியர்கள் சுமார் 14 லட்சம் பேர் தற்போது அங்கு பணிபுரிந்து வருகின்றனர். இந்த மசோதா மூலம் இந்தியர்களின் எண்ணிக்கையை நாட்டின் மக்கள் தொகையில் 15 சதவீதமாக குறைக்க வகை செய்திருக்கிறது. இதனால் சுமார் 6.5 முதல் 7 லட்சம் இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேறவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
எவ்வாறாயினும், இந்த மசோதா மற்ற தேசிய இனங்களுக்கும் இதேபோன்ற ஒதுக்கீட்டை முன்மொழிகிறது. இரண்டாவது பெரிய வெளிநாட்டினர் சமூகமாக விளங்கும் எகிப்தியர்களின் எண்ணிக்கையை குவைத்தின் மொத்த மக்கள் தொகையில் 10% ஆகக் குறைக்க வலியுறுத்தியுள்ளது.
இந்தியா அந்நிய செலவாணி ஈட்டுவதில் குவைத் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. 2018 ம் ஆண்டு குவைத்திலிருந்து சுமார் 36,000 கோடி ரூபாய் அனுப்பப்பட்டது. குவைத் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே சிறுபான்மையினராக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த மசோதாவின் மூலம், குவைத் இனி புலம் பெயரும் தொழிலாளர்களுக்கு வரவேற்பளிக்கும் நாடாக இருக்க விரும்பவில்லை என்பதன் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. கோவிட் -19 மற்றும் எண்ணெய் விலை சரிவு ஆகியவையும் வேறு சில காரணங்களாக உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஆரம்பித்ததில் இருந்து குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க கோரிக்கைகள் எழுந்துவருவதால் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் அதற்கான அழைப்பு விடுத்துள்ளதாக, வளைகுடா நாளேடு கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. இதனிடையே, குவைத் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 70 சதவீதமாக இருக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை 30 சதவீதமாக குறைக்க முடிவெடுத்திருக்கிறார்.
தொழிலாளர் சட்ட திருத்தம் குறித்து இந்திய தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரம் குறித்து இந்தியா இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
குவைத்தில் உள்ள இந்தியர்கள் சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் உள்ளதோடு, அவர்கள் பெரும்பாலும் ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் சட்டத்தை மதிக்கும் நபர்களாக கருதப்படுகிறார்கள். மேலும், இருதரப்பு உறவுகளில் இந்திய சமூகத்தின் பங்கு முக்கிய காரணியாக விளங்குகிறது என்று இந்திய வெளியுறவுத்துறை கூறுகிறது.