
சென்னை: தமிழக தலைநகரில் இரண்டாவது நாளாக, கொரோனா தொற்று 2000க்கும் குறைவாக கண்டறியப்பட்டுள்ளது. இரண்டாவது நாளில் 1713 புதிய தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு, 21 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
ஒட்டுமொத்த தமிழகத்தில், தொடர்ந்து நான்காவது நாளாக தொற்று எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது. ஞாயிறன்று மட்டும் புதிதாக 4150 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், 60 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,11,151 என்பதாக அதிகரித்துள்ளதுடன், மரணமடைந்தோர் எண்ணிக்கை 1510ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதானது, பல தரப்பிலும் நிம்மதியை உண்டாக்கியுள்ளது.
கடந்த சனியன்று(ஜூலை 4) மொத்தம் 11114 பேருக்கு சென்னையில் சோதனை மேற்கொள்ளப்பட்டதன் மூலம், தொற்று விகிதத்தில் 16.52% வீழ்ச்சி ஏற்பட்டது. கடந்த ஜூன் 30 வரையிலான நிலவரப்படி, வைரஸ் தொற்று விகிதம் தினந்தோறும் 20% அதிகரித்து வந்தது மற்றும் ஜூன் 12ம் தேதியன்று அதன் அளவு, அதிகபட்சமாக 31% எகிறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
“சென்னை நகரில் தொற்று விகிதம் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று எண்ணிக்கை குறித்து மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தொற்றைக் கட்டுப்படுத்துவதில், சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைகள் பாராட்டும்படியாக உள்ளன.
தீவிர ஊரடங்கிற்கு முன்னதாக, மொத்தம் 9,500 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. தற்போது, அந்த ஊரடங்கின் விளைவாக 8,402 தெருக்கள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டவை என்ற கணக்கில் உள்ளன” என்றுள்ளார் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்.
Patrikai.com official YouTube Channel