புனே :
ட்விட்டரில் வழக்கமாக நடக்கும் பல கடுமையான வாக்குவாதங்களில் ஒன்று உணவைப் பற்றியது. அந்த வகையில் ஊரடங்கு நேரத்தில் சமூக வலைதள வாசிகளின் வாயை மெல்ல உதவியது புனேவில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தின் விளம்பர பலகை.
ஹைதராபாத் பிரியாணியைத் தவிர மற்ற அனைத்தையும் ‘புலாவ்’ என்று அந்த விளம்பரத்தில் கூறியது தான் சமூக வலைதள ‘பொங்கலுக்கு’ காரணமாக மாறியது.

இந்தியாவில் உள்ள பல மாநிலத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் பகுதியில் செய்யும் பிரியாணியே சிறந்ததது என்று ஆளுக்கொரு பக்கம் ‘கார சாரமாக’ விவாதிக்க பிரியாணி என்ற பெயர் மட்டுமே போதும் அப்படியே சாப்பிடுவோம் என்று இவ்வளவு நாட்களாக நினைத்திருந்த அப்பாவிகள் இந்த உணவு பிரியர்களின் சண்டையால் குழம்பிப் போயுள்ளனர்.
“ஏன்சியன்ட் ஹைதராபாத்” என்ற உணவகம் வெளியிட்டிருந்த இந்த விளம்பர பேனரின் புகைப்படம் ரெடிட் முதல் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடகங்கள் வரை ஆன்லைனில் பரவலாக பகிரப்பட்டு ‘புட் கோர்ட்’ ஆக மாறியது.
“ஹைதராபாத் பிரியாணியைத் தவிர அனைத்து வகையான பிரியாணிகளும் ‘புலாவ்’ என்று குறிப்பிடப்படும். இனிமேல் மும்பை மற்றும் பாகிஸ்தான் பிரியாணி ‘மட்டன் மசாலா சாதம்’ என்று அழைக்கப்படும்.” என்று ‘பிரியாணி கொள்கை’ என்பதன் கீழ், அந்த உணவகம் எழுதியிருந்தது.


ஹைதராபாத் உணவு வகைகளை விரும்பும் மக்கள் இதனை ஏற்றுக்கொண்டாலும், கொல்கத்தா பிரியாணி ஆதரவாளர்களும் லக்னோவிலிருந்து வந்தவர்களும் அதை ஏற்றுக்கொள்வதில்லை.
https://twitter.com/nihaal_ahmed1/status/1278631675233067008
“தங்கள் பிரியாணிக்கு தகுந்த மரியாதை கிடைக்கவில்லை” எனவும், ட்விட்டரில் நடந்த வாக்குவாதத்தில் “தங்கள் பிரியாணியை பற்றி பெயருக்கு கூட குறிப்பிடபடவே இல்லை” என்றும் கூறி மலபாரில் இருந்து வரும் கேரள மக்கள் தங்கள் பகுதி மசாலா ட்வீட் வேறு எங்கும் ஒளிந்திருக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கின்றனர்.


இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக ‘வெஜ்’ பிரியாணி ஆதரவாளர்கள் பலரும், புலாவ் ஒப்புமைக்கு கோபமடைந்தனர். இவர்களை சீண்டும் விதமாக, “இறைச்சி இல்லாமல் செய்வது எல்லாம் ஒரு பிரியணியா?” என்று கேட்கின்றனர் சிலர்.
சமூக வலைதளத்தில் வைரலாக உலா வந்த இந்த புகைப்படம் ஒரு வருடத்திற்கு முன் எடுக்கப்பட்டது என்பதும் ஊரடங்கு காரணமாக இந்த உணவகத்தின் முன் தற்போது இந்த பேனர் இல்லை என்பதும் இந்த விவாதத்தை அலசி ஆராய்ந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதள செய்தி கூறுகிறது.

மேலும் அதில், “ஆந்திர மற்றும் ஹைதராபாத் உணவை உண்மையாக விரும்பிய இந்த உணவகத்திற்கு வரும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இதை மறுக்கவில்லை, அந்த பேனர் எந்த கலாச்சாரத்தையும் குறிப்பிடுவதற்கு இல்லை மாறாக ஹைதராபாத் உணவை முழு மனதுடன் அனுபவிப்பதே இதன் பொருள்” என்று உணவகத்தின் உரிமையாளர் அசோக் பரிமி தெளிவுபடுத்தினார்.
உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் பேனரில் உள்ள நகைச்சுவையைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ‘முதிர்ச்சியடைந்தவர்கள்’ என்று கூறும் அவர் ஊரடங்கு முடிந்து இயல்புநிலை திரும்பும் போது மீண்டும் அந்த விளம்பர பலகை தங்கள் உணவகத்தின் முன் வைக்கப்படும் என்றும் கூறினார்.
புகைப்படம் பல்வேறு தளங்களில் தொடர்ந்து பகிரப்படுவதால், பல்வேறு உணவு கலாச்சாரம் மற்றும் வரலாறு குறித்த விவாதமும் தொடர்கிறது.
எது எப்படியோ, கடந்த 15 நாட்களாக இறைச்சியை கண்ணில் பார்க்காமல் சமூக வலைதளத்தில் வடை சுட்டுக்கொண்டிருந்த சென்னை வாசிகள் இன்று சுதந்திர பறவைகளாய் தங்களின் உணவு கலாச்சாரம் மாறியது குறித்து அங்கலாய்க்க போவது மட்டும் நிச்சயம்.