டில்லி
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையான வார்த்தைகளால் திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கல்யாண் பானர்ஜி விமர்சித்துள்ளார்.

நாடெங்கும் சுமார் 7 நாட்கள் முன்பு வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.    சுமார் 3 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து ஏற்பட்ட விலை உயர்வால் நாட்டு மக்கள் பெரிதும் துயர் அடைந்தனர்.   ஊரடங்கு நேரத்தில் மக்கள் அவதியுறும் நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய ரயில்வே 109 தடங்களில் தனியார் ரயில்கள் இயக்கப்போவதாக அறிவிப்பை வெளியிட்டது  இந்த ரயில்கள் 16 பெட்டிகளுடன் இயங்கும் என அறிவித்த இந்தியன் ரயில்வே இதற்காக தனியார் நிதி, கொள்முதல், இயக்கம் மற்றும் பராமரிப்பை கவனித்துக் கொள்ளும் என அறிவித்தது.
இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. அரசின் எரிபொருள் விலை உயர்வு மற்றும் ரயில்வே தனியார் அமௌயம் உள்ளிட்டவற்றை எதிர்த்து மேற்கு வங்கத்தில் உள்ள பன்குரா என்னும் இடத்தில் எதிர்ப்பு பேரணி ஒன்றை திருணாமுல் காங்கிரஸ் கட்சி நடத்தியது.  இதில் அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் கல்யாண் பானர்ஜி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
அவர் தனது உரையில் . “நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பொருளாதாரத்தை பாழாக்கி வருகிறார்.  இதற்காக அவர் வெட்கம் அடைந்து பதவி விலக வேண்டும்.  ஒரு நச்சுப் பாம்பு கடித்து மக்கள் உயிர் இழப்பது போல இந்திய பொருளாதாரத்தை நிர்மலா சீதாராமன் பாழாக்கி மக்களின் உயிரைப் போக்கி வருகிறார்.   நிர்மலா சீதாராமன் உலகின் மிக மோசமான நிதி அமைச்சர்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதற்கு மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர், “திருணாமுல் காங்கிரஸ் கட்சியில் நுனி முதல் அடிவரை ஊழல் அதிகரித்துள்ளது.   அவர்களில் பலர் உட்கட்சி பகை காரணமாக குழப்பத்தில் உள்ளன்ர்.  அதை திசை திருப்ப வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகின்றனர்.  அதற்கு நாம் முக்கியத்துவம் அளிக்கக்கூடாது: என தெரிவித்துள்ளார்.