சென்னை:சென்னையில் ஜூன் 25ம் தேதி 9500 கொரோனா தொற்றுகள் இருந்ததாகவும், ஜூலை 3ல் அது 8402 ஆக குறைந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.
கொரோனா காரணமாக தமிழகத்தில் ஜூலை 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினிகளை கொண்டு சுத்தப்படுத்தி வருகின்றனர்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் நடைபெற்று வரும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊர்டங்கு காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. சென்னையில் ஜூன் 25ம் தேதி 9500 கொரோனா தொற்றுகள் இருந்தது. ஜூலை 3ல் அது 8402 ஆக குறைந்திருக்கிறது.
யாருக்கேனும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மறைக்காமல் 3 நாட்களுக்குள் மருத்துவரை அணுக வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுவதுமாக கடைபிடித்து, வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும் என்று தெரிவித்தார்.