விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் காவல்நிலையத்தில் இனி போலீஸ் நண்பர்குழுவினர் வர தடை – மாவட்ட போலீஸ்சூப்பபிரண்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் ஜெயராஜ், பெண்ணிக்ஸ் தந்தை மகன் கொலை வழக்கு பல வகையில் தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த கொலை குற்றத்தின் விசாரணையின் கீழ் காவல்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள், போலீஸ் நண்பர்கள் குழு என பல தரப்பினரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

காவல்துறைக்கு உதவி செய்யும் பொருட்டு இயங்கி வரும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்கள் குழு, தங்களின் அதிகாரத்தை மீறி காவல் துறை அதிகாரிகள் போல தங்களை பாவித்து அப்பாவி மக்களை அவ்வப்போது மிரட்டி வருவதாகவும் பல இடங்களில் குற்றசாட்டு எழுவதாக தெரியவருகிறது.

இந்நிலையில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்கள் குழுவிற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட காவல் நிலையத்திற்கு இனி பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர் குழுவினர் வர தடை விதிப்பதாக மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர் குழுவிற்கு பதிலாக ஊர்காவல்படையினர் மற்றும் முன்னாள் வீரர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி போலீஸ் நண்பர்கள் குழுவினர் காவல்நிலையத்திற்கு அனுமதித்தால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடுமையாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.