மதுரை:

துரை மாவட்டத்தில் வரும் 6 ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் கொரோனா பரவலை தடுக்க வரும் 5-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் நோய் தொற்று குறையாத காரணத்தால், வரும் 6 ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு மற்றும் மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நாட்களில் அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முழு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும், அந்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், இந்த பகுதிகளில் நாளொன்றுக்கு இரு முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா ஒழிப்பு பணிக்கு அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என கேட்டுக் கொண்ட தமிழக அரசு, பொதுவெளிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து மக்கள் கொரோனாவை ஒழிக்க உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.