ஹாங்காங்: சீன அரசின் தரப்பிலிருந்து டக் டாக் பயன்படுத்தும் இந்திய பயனர்களின் தரவுகள் கேட்கப்படவில்லை என்றும், அப்படியே எதிர்காலத்தில் கேட்கப்பட்டாலும்கூட, அதற்கு டிக் டாக் நிறுவனம் உடன்படாது என்றும் இந்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார் அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கெவின் மேயர்.
இந்தியாவின் லடாக் பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட எல்லைப் பிரச்சினையை அடுத்து, இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றது சீன ராணுவம். இதனையடுத்து, சீனா தொடர்பான எதிர் பொருளாதார நடவடிக்கைகள் பல இந்தியாவின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், டிக் டாக் உள்ளிட்ட மொத்தம் 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசின் சார்பில் தடைவிதிக்கப்பட்டது. இதனால், டிக் டாக் செயலிக்கு சொந்தமான சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இந்திய அரசிற்கு, அந்நிறுவனம் நிறுவனம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அதில், “இந்தியப் பயனர்களின் தரவு விபரங்கள் எதுவும் சீன அரசால் கேட்கப்படவில்லை. அப்படியே எதிர்காலத்தில் கேட்கப்பட்டாலும்கூட, அத்தகைய கோரிக்கைக்கு செவிசாய்க்க மாட்டோம்.
இந்தியப் பயனர்களின் விபரங்கள் அனைத்தும், சிங்கப்பூரிலுள்ள சர்வர்களில் சேமிக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார் அந்நிறுவனத்தின் தலைவர் கெவின் மேயர்.
டிக் டாக் செயலி தடைசெய்யப்பட்டதும், உள்ளூர் செயலியான ‘ரொபோஸோ’, புதிதாக 22 மில்லியன் பயனர்களைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.