கொரோனா தடுப்பூசியைக்கொண்டு மனிதர்கள் மீது சோதனை நடத்த குஜராத் நிறுவனதுக்கும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் வழங்கி உள்ளது.
அதன்படி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சைடஸ் காடில்லா ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதனை நடத்த உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகளில் பல நூறு நிறுவனங்கள் ஈடுபட்டு வரும் நிலையில், சில மருந்துகளின் சோதனைகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அகமதாபாத்தைச் சேர்ந்த சைடஸ் காடில்லா என்ற நிறுவனத்துக்கும் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மனிதர்கள் மீது இந்த மருந்தை இரு கட்டங்களாகப் பரிசோதனை செய்யலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டி.சி.ஜி.ஐ.) அந்நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளது.
ஏற்கனவே இந்த மருந்து எலி, முயல், கினியா பிக், போன்ற விலங்குகளுக்கு மருந்துகளைப் பரிசோதனை செய்ததில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதாகவும், இந்த மருந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வளர்ந்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ள நிலையில், தற்போது மனிதர்களிம் சோதனை நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, ஐசிஎம்ஆர் உடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கண்டறிந்த “கோவாக்ஸின்” கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் சோதனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது 2வது நிறுவனமாக அகமதாபாத் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.