நெல்லை:
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்று கூறிய சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீசிடமும் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.
உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி, சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை உடனே விசாரணையை கையிலெடுக்க கிளை உத்தரவிட்டது. அதன்படி ஜூன் 30-ஆம் தேதி முதல் சிபிசிஐடி காவல் துறையினரும் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
விசாரணையில் கிடைத்த ஆதாரங்கள் மூலம், முதல்தகவல் அறிக்கையில், கொலைக்கு காரணமாக காவல்துறையினர் மீது கொலை வழக்கு என மாற்றி பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் தலைமை காவலர் முருகன் மற்றும் முத்துராஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில், காவல்துறையினரிடம் இருந்து தந்தை மகனை அடித்து உதைத்த ஃபிரண்ட்ஸ் ஆப் போலீசிடமும் விசாரணை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிபிசிஐடி ஐ.ஜி சங்கர், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீசிடமும் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.
மேலுர், இந்த வழக்கில், அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்று கூறியவர், காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டார் என வெளியான தகவல் உண்மையில்லை, அவரை தேடி வருகிறோம். ஓரிரு நாளில் பிடிபடுவார். காவல்நிலைய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சில பதிவுகள் கிடைத்துள்ளன. அதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் நடுநிலையான விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.