டில்லி
தனியார் மருத்துவர்கள் கொரோனா பரிசோதனைக்குப் பரிந்துரை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கு தடுப்பூசி ஏதும் கண்டறியப்படாததால் பரிசோதனை, கவனிப்பு, சிகிச்சை என்னும் முறை பின்பற்றப்படுகிறது. கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த உடனடி கண்டுபிடிப்பு மிகவும் அவசியமாக உள்ளது. இதனால் அரசு பரிசோதனைகளை அதிகப்படுத்தி வருகிறது.
இதுவரை 90.56 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1065 பரிசோதனை சாலைகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் நடைபெறும் சோதனை எண்ணிக்கைகள் உயர்ந்து வருகிறது. நேற்று முன் தினம் ஒரே நாளில் 2,29,588 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. இதற்காக நாடெங்கும் நடமாடும் சோதனை நிலையங்களை அமைக்க மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது கொரோனா அறிகுறிகளுடன் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அரசு மருத்துவர்கள் பரிந்துரை அளிக்க வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு இதனால் அதிக அளவில் பணிச்சுமை ஏற்படுகிறது. மேலும் உடனடி பரிசோதனை என்பதற்கு இது ஒரு தாமதத்தை ஏற்படுத்துகிறது. இதையொட்டி நேற்று மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி அனைத்து பதிவு பெற்ற மருத்துவர்களும் கொரோனா பரிசோதனைக்குப் பரிந்துரை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவின் வழி முறைகளைப் பின்பற்றி இருக்க வேண்டும். இதன் மூலம் பரிசோதனைகள் அதிகரித்து கொரோனா பாதிப்பு உடனடியாக கண்டறிய முடியும் எனவும் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் பணிச்சுமையும் வெகுவாக குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]